ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படும் என்று கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா கூறினார்.
எங்களின் நடவடிக்கையால் மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் உள்ள தி.மு.க. அதிருப்தி அடைவது பற்றி எங்களுக்குக் கவலை இல்லை என்றும் அவர் கூறினார்.
சி.என்.என்.- ஐ.பி.என். தொலைக்காட்சிக்கு எஸ்.எம்.கிருஷ்ணா அளித்துள்ள பேட்டியில், "நாங்கள் எப்போதும் உச்ச நீதிமன்றத்திற்குத்தான் செல்வோம். அங்குதான் ஒவ்வொரு மாநிலத்திற்கும் உரிய பாதுகாப்பு கிடைக்கும்" என்றார்.
இந்த நடவடிக்கைகளுக்கு கட்சித் தலைமையின் அனுமதி கிடைக்குமா என்று கேட்டதற்கு, "அதைப்பற்றி எங்களுக்கு கவலை இல்லை. இந்த விடயத்தில் அவர்கள் எதுவும் செய்ய இயலாது.
ஒகேனக்கல் விடயத்தில் ஐ.மு.கூ. பாதிக்கப்பட்டால் கூட எங்களுக்குக் கவலை இல்லை. எங்கள் கவலை எல்லாம் நீர்ப் பங்கீட்டு விவகாரத்தில் கர்நாடகம் பாதிக்கப்படக் கூடாது என்பதுதான்" என்றார்.