Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சகோதரர்களாக இருப்போம்: கன்னட அமைப்பின் தலைவர் தமிழ்ச்சங்க தலைவருட‌ன் சந்திப்பு!

சகோதரர்களாக இருப்போம்: கன்னட அமைப்பின் தலைவர் தமிழ்ச்சங்க தலைவருட‌ன் சந்திப்பு!
, சனி, 5 ஏப்ரல் 2008 (12:48 IST)
''கன்னடர்களும், தமிழர்களும் சகோதரர்களாக எப்போதும் இருப்போம்'' என்று கன்னட அமைப்பான `கர்நாடக ரக்ஷண வேதிகே'யின் தலைவர் நாராயண கவுடா தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

ஒகேனக்கல் குடிநீர் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, கர்நாடக மாநிலத்தில் கன்னட அமைப்புகளை சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். பெங்களூர் தமிழ்ச்சங்கம், தமிழ் திரைப்படங்கள் ஓடும் தியேட்டர்கள் மற்றும் தமிழக அரசு பேரு‌ந்துக‌ள் தாக்கப்பட்டன.

ஏ‌ப்ர‌ல் 10ஆ‌ம் தேதி மா‌நில‌ம் முழுவதும் கடையடைப்பு நடத்தப்பட உள்ளதாக கர்நாடக ரக்ஷண வேதிகே உள்ளிட்ட கன்னட அமைப்புகள் அறிவித்துள்ளன.

அதே சமயத்தில் தமிழகத்திலும் கர்நாடகத்திற்கு எதிராக போராட்டங்கள் நடத்தப்பட்டன. தமிழ் திரையுலக‌ம் நே‌ற்று சென்னையில் உண்ணாவிரத போராட்டம் ந‌ட‌த்‌தியது. கன்னடர்களின் தொடர் போராட்ட அறிவிப்புகளை தொடர்ந்து தமிழர்களுக்கு பாதுகாப்பு கேட்டு பெங்களூர் தமிழ்சங்கம் சார்பில் பிரமாண்ட பேரணி நடத்த முடிவு செய்யப்பட்டது.

அத்துடன், தமிழர்களின் அடிப்படை உரிமைகள், குடிமை உரிமைகள், மனித உரிமைகள் காப்பாற்றப்படாததை கண்டித்து, நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை தமிழர்கள் புறக்கணிப்பது குறித்து ஏ‌ப்ர‌ல் 6ஆ‌ம் தேதி பெங்களூர் தமிழ்சங்கத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது. தமிழர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று பெங்களூர் காவ‌ல்துறை ஆணைய‌‌ரிடமு‌ம் தமிழ்ச்சங்கம் சார்பில் மனு கொடுக்கப்பட்டது.

இந்த நிலையில், தமிழர்களுக்கு எதிராக போராட்டங்களை நடத்திய கர்நாடக ரக்ஷண வேதிகே அமைப்பின் தலைவர் நாராயண கவுடாவும், பெங்களூர் தமிழ் சங்க தலைவர் சண்முகசுந்தரமும் நேற்று மதியம் பெங்களூர் பத்திரிகையாளர்கள் சங்கத்தில் திடீரென்று சந்தித்தனர்.

இந்த சந்திப்பின்போது நாராயண கவுடா பேசுகை‌யி‌ல், எப்போதுமே கர்நாடக ரக்ஷண வேதிகே இங்கு வாழும் பிற மொழியினருக்கு எதிராக நடந்து கொண்டதில்லை. இப்போது நடக்கும் போராட்டம் தமிழக அரசுக்கு எதிராகத்தானே தவிர இங்குள்ள தமிழர்களுக்கோ, தமிழகத்தில் உள்ள தமிழர்களுக்கோ எதிராக நடத்த வில்லை.

இனிமேலும் எந்த மொழியினருக்கும் எதிராக போராட்டம் நடத்த மாட்டோம். பெல்காம் பிரச்சினையில் கூட மராட்டிய அரசுக்கு எதிராகத்தான் போராட்டம் நடத்தினோமே தவிர அங்கு வாழும் மராட்டிய மக்களுக்கு எதிராக போராட்டம் நடத்தவில்லை.

எனவே, எப்போதும் போல கர்நாடக மாநிலத்தில் வாழும் கன்னடர்களும், தமிழர்களும் சகோதரர்களாக இருப்போம். 10ஆ‌ம் தேதி நடைபெறும் கடையடைப்பு போராட்டத்தில் அத்தியாவசிய தேவைகளான மருத்துவம், பால், பத்திரிக்கைகள் தவிர மற்ற வர்த்தக நிறுவனங்கள் அனைத்தும் வேலைநிறுத்தத்தில் ஈடுபடும். எந்த தனிநபரின் சொத்துகளுக்கோ, பொது சொத்துகளுக்கோ சேதம் விளைவிக்க மாட்டோம் எ‌ன்று நாராயண கவுடா கூறினார்.

இதை‌த் தொடர்ந்து தமிழ்ச்சங்க தலைவர் சண்முக சந்தரம் பே‌சுகை‌யி‌ல், பெங்களூரில் உள்ள தமிழர்களின் பேசும் மொழியாக தமிழ் இருந்தாலும் நாங்களும் உணர்வால் கன்னடர்கள் தான். நாங்கள் கன்னடர்களின் உடன் பிறந்த சகோதரர்கள். எங்களால் இதுவரை எந்த கன்னடர்களுக்கும் எந்த தொந்தரவும் ஏற்பட்டதில்லை. மாநிலம் முழுவதும் உள்ள இரு தரப்பினரும் அமைதியாக வாழவே விரும்புகிறோம்.

பெங்களூர் தமிழ்சங்கத்தில் நீண்ட நாட்களாக பிற மொழியினருக்கு கன்னட மொழியினை கற்றுத்தந்து வருகிறோம். இதுவரை கர்நாடகத்தின் வளர்ச்சிக்கு கர்நாடக தமிழர்கள் பெரும் உழைப்பினையும், தியாகத்தையும் தந்திருக்கிறார்கள். பெங்களூரில் உள்ள சின்னசாமி அரங்கம் சின்னசாமி முதலியார் என்ற தமிழரால் தானமாக வழங்கப்பட்டது. எதிர்காலத்திலும் தமிழர்கள் கர்நாடகத்திற்கு விரோதமாக நடந்து கொள்ள மாட்டார்கள் எ‌ன்று சண்முகசுந்தரம் கூ‌றினா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil