ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்ட விவகாரத்தில் பேச்சின் மூலம் கருத்தொற்றுமையை ஏற்படுத்துவதற்குத் தமிழகம் ஒத்துழைக்க வேண்டும் என்று கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பெங்களூருவில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய எஸ்.எம்.கிருஷ்ணா, "புதன்கிழமை டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்தித்து, ஒகேனக்கல் திட்டம் தொடர்பாக கர்நாடகாவிற்கு உள்ள அதிருப்திகளையும் போராட்டத்தைத் தூண்டுவதாக அமைந்திருந்த தமிழக முதல்வர் கருணாநிதியின் பேச்சைப் பற்றியும் விளக்கினேன்.
இத்திட்டம் முழுமையாக குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்வதற்கு மட்டும்தான் என்று தமிழகம் கூறினாலும், பல ஆண்டுகளாக இரு மாநிலத்திற்கும் இடையில் உள்ள நீர்ப் பங்கீட்டுப் பிரச்சனையைக் கருத்தில்கொண்டு சில நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டியதும் அவசியம்.
இரு மாநிலங்களின் நலன்களைக் கருத்தில்கொண்டு ஒகேனக்கல் திட்டத்தில் பேச்சுக்களின் மூலம் கர்நாடகத்துடன் கருத்தொற்றுமையை உருவாக்குவதற்கு தமிழகம் ஒத்துழைக்க வேண்டும்" என்றார்.