முன்பேர வர்த்தகத்தையும், இதில் அத்தியாவசிய பொருட்களின் மீது வர்த்தகர்கள் ஊக வணிகத்தில் ஈடுபதை ஈடுபடுவதையும் கட்டுப்படுத்த முடியாத மத்திய அமைச்சர் சரத் பவார் ராஜினமா செய்ய வேண்டும் என்று ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவர் சரத் யாதவ் கூறியுள்ளார்.
புது டெல்லியில் உள்ள அவரின் கட்சி தலைமையகத்தில் சரத் யாதவ் செய்தியாளர்களிடம் பேசும் போது, சரத் பவார் அமைச்சர் பதவியில் இருந்து ராஜினமா செய்வது, அவர் கிரிக்கெட் விளையாட்டு அதிக கவனம் .செலுத்துவதற்கு உதவிகரமாக இருக்கும் என்றார்.
முந்தைய பாரதீய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசில் அத்தியாவசிய உணவுப் பொருட்களான கோதுமை, சர்க்கரை போன்ற உணவுப் பொட்கள் 600 லட்சம் டன் வரை இருப்பு வைக்கப்பட்டன. இதை தற்போதைய காங்கிரஸ் தலைமையிலான அரசு 77 லட்சம் டன்னாக குறைந்து விட்டது.
இதுமட்டுமின்றி அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அதிக அளவு ஏற்றுமதி ஆவதை மத்திய அரசு கண்காணிக்கவில்லை. முந்தைய தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் 1998 முதல் 2000 வரை ஆட்சி காலத்துடன் விலைவாசியை ஒப்பிட்டால், தற்போது 100 விழுக்காடுவரை அதிகரித்துள்ளது.
தேவையான அளவு உணவு தானியங்களை உற்பத்தி செய்வதும், பொது விநியோகமுறையை பலப்படுத்துவதும், உணவு கையிருப்பு வைத்துக் கொள்வது ஒன்றுக் கொன்று தொடர்புடையவை. பல்வேறு காரணங்களுக்காக உணவு தானியங்களுக்கு பதிலாக மற்ற பணப்பயிர்களை உற்பத்தி செய்வதற்கு ஊக்குவித்ததும், உணவு தானிய உற்பத்தி குறைந்ததற்கு காரணம்.
மத்திய அரசு விவசாயிகளிடம் உரிய விலை கொடுத்து கொள்முதல் செய்வதை விட, இறக்குமதி செய்வதையே விரும்புகிறது.
காங்கிரஸ் தலைமையிலான அரசு பல வருடங்களாக விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யும் உணவு தானியங்களுக்கு குறைந்த பட்ச ஆதார விலையை அதிகரிக்கவில்லை.
இதன் மூலம் பொது விநியோக திட்டத்திற்காக விவசாயிகளிடமிருந்து உணவு தானியங்களை கொள்முதல் செய்யும் முறையையே சீர்குலைத்துவிட்டது. உணவு தானிய கையிருப்பு குறைவாக இருப்பதால், சந்தையில் விலை உயர்வதை கண்காணிக்காமல் விட்டுவிட்டது. அத்துடன் வியாபாரிகள் குறைந்த விலைக்கு கொள்முதல் செய்யும் நிலையை உருவாக்கி விட்டது என்று சரத் யாதவ் கூறினார்.