திபெத்தியர்கள் இந்திய எல்லைக்குள் இருந்து சீனாவிற்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடுவதை ஒருபோதும் பொறுத்துக் கொள்ளாது என்றும், இவ்விடயத்தில் சீனாவிற்கு முழு ஆதரவளிப்பதாகவும் அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளதாக சீனா கூறியுள்ளது.
பிரணாப் முகர்ஜியை சீன அயலுறவுத்துறை அமைச்சர் யாங் ஜியிச்சி தொலைபேசியில் நேற்று தொடர்பு கொண்டபோது, இருநாட்டு உறவுகள் குறித்தும், தலாய் லாமா விவகாரம் குறித்தும் தங்களது கருத்துக்களை இருவரும் பகிர்ந்து கொண்டனர்.
அப்போது, "சீனாவை பிரிக்க தலாய்லாமாவின் ஆதரவாளர்களால் மேற்கொள்ளப்படும் அனைத்து திட்டங்களும் தோல்வியடைந்து வருகின்றன. இது தொடரும்" என்று யாங் கூறியுள்ளார்.
அதற்கு பிரணாப் முகர்ஜி, "திபெத் சீனாவின் ஒரு அங்கம். திபெத்தியர்கள் இந்திய எல்லைக்குள் இருந்துகொண்டு சீனாவிற்கு எதிரான எந்த ஒரு அரசியல் நடவடிக்கைகளிலும் ஈடுபடுவதை இந்தியா பொறுத்துக் கொள்ளாது" என்று கூறியதாக சீன நாட்டு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
யாங் உடனான உரையாடலின்போது, "பீஜிங் ஒலிம்பிக் போட்டிகளுக்கு இந்தியா முழு ஒத்துழைப்பை அளிக்கும். ஒலிம்பிக் போட்டிகள் உலக மக்களுக்கு பொதுவானது. இந்த ஆண்டு போட்டிகள் ஆசியாவில் நடைபெறுவதற்கு இந்தியா பெருமை கொள்கிறது" என்று முகர்ஜி மேலும் தெரிவித்துள்ளார்.
கடந்த 30-ம் தேதி சீனாவின் தேசிய ஆலோசகர் டாய் பிங்கூ, இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு திபெத் விவகாரம் குறித்து இந்தியாவின் நிலைப்பாட்டை கேட்டறிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.