கர்நாடகச் சட்டப் பேரவைத் தேர்தல் வருகிற மே 10,16 மற்றும் 22 ஆகிய தேதிகளில் 3 கட்டங்களாக நடக்கும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
புது டெல்லியில் இன்று தலைமைத் தேர்தல் ஆணையர் என்.கோபாலசாமி கர்நாடகச் சட்டப் பேரவைத் தேர்தல் அட்டவணையை வெளியிட்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மொத்தம் 224 தொகுதிகளைக் கொண்ட கர்நாடகச் சட்டப் பேரவைக்கு வருகிற மே 10,16 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாக வாக்குப் பதிவு நடக்கும்.
முதல் கட்டமாக 89 தொகுதிகளுக்கு நடக்கவுள்ள தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் ஏப்ரல் 16 ஆம் தேதி துவங்கும். வேட்புமனுத் தாக்கலுக்கான இறுதி நாள் ஏப்ரல் 23. அடுத்த நாள் வேட்புமனுப் பரிசீலனை நடக்கும். மனுக்களைத் திரும்பப் பெறுவதற்கான கடைசி நாள் ஏப்ரல் 26.
இரண்டாவது கட்டமாக 66 தொகுதிகளுக்கு நடக்கவுள்ள தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் ஏப்ரல் 22 ஆம் தேதி துவங்கும். வேட்புமனுத் தாக்கலுக்கான இறுதி நாள் ஏப்ரல் 29. அடுத்த நாள் வேட்புமனுப் பரிசீலனை நடக்கும். மனுக்களைத் திரும்பப் பெறுவதற்கான கடைசி நாள் மே 2.
மூன்றாவது கட்டமாக 69 தொகுதிகளுக்கு தேர்தல் நடக்கும். இதற்கான வேட்புமனுத் தாக்கல் ஏப்ரல் 26 ஆம் தேதி துவங்கும். வேட்புமனுத் தாக்கலுக்கான இறுதி நாள் மே 3. வேட்புமனுப் பரிசீலனை மே 5. மனுக்களைத் திரும்பப் பெறுவதற்கான கடைசி நாள் மே 7.
கர்நாடகத்தில் அரசியல் நெருக்கடி ஏற்பட்டதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு நவம்பர் 28 ஆம் தேதி சட்டப் பேரவை கலைக்கப்பட்டது. இதையடுத்து இன்றுவரை அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி நடந்து வருகிறது.