தொண்டர்கள் வழங்கிய அன்பளிப்பிற்கு வருமான வரி செலுத்தாதது குறித்து உத்தர பிரதேச மாநில முதலமைச்சர் மாயாவதிக்கு டெல்லி உயர்நீதிமன்றம் தாக்கீது அனுப்பியுள்ளது.
கடந்த 2003ஆம் ஆண்டில் தொண்டர்களிடம் இருந்து ரூ.62.72 மதிப்பிலான பொருட்கள், ரூ.2 லட்சம் தொகை ஆகியவற்றை மாயாவதி அன்பளிப்பாக பெற்றார். இதற்கு வரி செலுத்த தேவையில்லை என்று வருமான வரித்துறை தெரிவித்துவிட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய அரசு டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு செய்தது. அதில், பெறப்பட்ட அன்பளிப்புகளை மாயாவதியின் ஆண்டு வருமானத்தில் சேர்க்க வேண்டும் என்று கோரியது.
இந்த மனுவை விசாரித்த மதன் பி லாக்குர், வி பி குப்தா ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் அமர்வு இதுகுறித்து வரும் செப்டம்பர் 19 ஆம் தேதிக்குள் மாயாவதி விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
அன்பளிப்பாக பெற்ற வருமானத்திற்கு ஏன் வரி செலுத்தக்கூடாது என்பதற்கான காரணங்களை அளிக்க வேண்டும் என்று தாக்கீதில் கேட்கப்பட்டுள்ளது.