ஒகேனக்கல் விவகாரம் தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்கை தமிழக அரசு சார்பில் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு, கர்நாடகா சார்பில் முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா ஆகியோர் தனித்தனியே சந்தித்து தங்கள் தரப்பு கோரிக்கைகளை முன்வைத்தனர்.
ஒகேனக்கல் விவகாரம் தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்கை டெல்லியில் இன்று (புதன்கிழமை) சந்தித்த மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சர் டி.ஆர்.பாலு, கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை எதிர்க்கக் கூடாது என்று கர்நாடகத்தை வலியுறுத்துமாறு கேட்டுக் கொண்டார்.
ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்ட விவகாரத்தில் மத்திய அரசு தலையிட்டு கர்நாடக எதிர்ப்பைத் தடுக்க வேண்டும் என்று வலியுறுத்தித் தமிழகச் சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மான நகலையும் பிரதமரிடம் அமைச்சர் டி.ஆர்.பாலு வழங்கினார்.
இதையடுத்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கடந்த 1998 ஆம் ஆண்டு தமிழக அரசிற்கும் கர்நாடக அரசிற்கும் இடையில் மத்திய அரசின் முன்னிலையில் ஒரு ஒப்பந்தம் ஏற்பட்டது. அதன்படி காவிரியில் இருந்து பெங்களூரு நகரக் குடிநீர்த் தேவைக்கும் தமிழகத்தின் குடிநீர்த் தேவைக்கும் நீர் எடுத்துக்கொள்வது என்று முடிவானது.
இதன்படி பெங்களூரு நகரத்தின் குடிநீர்த் தேவைக்கு நீர் எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்திற்கு ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்திற்கு மத்திய வனத்துறை அமைச்சகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளிடம் இருந்தும் தேவையான எல்லா அனுமதியும் முறைப்படி பெறப்பட்டுள்ளது. கர்நாடகத்திற்குத் தேவையான தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் இத்திட்டத்திற்கு கர்நாடகம் எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது. இந்த விவரங்களையும், கர்நாடகத்தில் விரைவில் சட்டப் பேரவைத் தேர்தல் வரவிருப்பதால் அரசியல் கட்சிகள் கையில் எடுத்துள்ள நாடகம்தான் இது என்பதையும் பிரதமரிடம் தெரிவித்துள்ளேன்.
ஜப்பான் நிதி நிறுவனத்தின் உதவியுடன் நிறைவேற்றப்பட உள்ள ரூ.1,334 கோடி மதிப்புள்ள ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தின் மூலம், வறட்சியால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்கள் மிகவும் பயன்பெறும். இவ்வாறு அமைச்சர் பாலு கூறினார்.
எஸ்.கிருஷ்ணா பிரதமரிடம் கோரிக்கை!
கர்நாடகச் சட்டப் பேரவைத் தேர்தலை முன்னிட்டு எழுந்துள்ள ஒகேனக்கல் விவகாரத்தில் இன்று பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்தித்த அம்மாநில முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா, மத்திய அரசு இதில் தலையிட்டு கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை நிறுத்தி வைக்குமாறு தமிழக அரசை வலியுறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
புது டெல்லியில் இன்று பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் எஸ்.எம். கிருஷ்ணா கூறியதாவது:
கர்நாடகத்தில் விரைவில் தேர்தல் நடக்கவுள்ளது. அதன்பிறகு அமையவுள்ள புதிய அரசும், தமிழக அரசும் இப்பிரச்சனையைப் பேசித் தீர்த்துக் கொள்ளலாம்.
அதுவரை, இவ்விவகாரத்தின் உணர்வுபூர்வமான தன்மையைக் கருத்தில்கொண்டு கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை நிறுத்தி வைக்குமாறு தமிழக அரசை மத்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்று பிரதமரிடம் கோரிக்கை வைத்துள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.