தடை செய்யப்பட்ட இந்திய இஸ்லாமிய மாணவர் இயக்கத்தைச் சேர்ந்த (சிமி) மேலும் 3 பேர் மத்தியப் பிரதேசத்தில் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூர் அருகில் உள்ள நிகல்புரா, ஜூனா ரைசாலா ஆகிய பகுதிகளில் நடத்திய தேடுதல் வேட்டையில், அமான், ஜாகிர் லாலா, இர்ஃபான் சிப்பா அகிய 3 சிமி இயக்கத்தினர் கைது செய்யப்பட்டதாக காவல்துறை கண்காணிப்பாளர் அன்சுமான் சிங் யாதவ் தெரிவித்தார்.
இதில் அமான் சிமி இயக்கத்தினருக்கு ஆயுதப் பயிற்சிகள் உள்ளிட்ட பயிற்சிகளை அளித்து வந்துள்ளார். ஜாகிர் லாலா இயக்கத்தின் நிர்வாகிகளில் ஒருவராக இருந்துள்ளார். சிப்பா, சிமி இயக்கத்தினருக்கு உதவுதல், சதிச் செயல்களுக்கு உதவுதல் உள்ளிட்டவற்றை செய்து வந்துள்ளார்.
இவர்களிடம் நடத்திய விசாரணையில் குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளனர். மேலும், சிமி இயக்கத்தின் செயல்பாடுகள் பற்றிப் பல விவரங்கள் தெரிய வந்துள்ளன.
இவற்றைக்கொண்டு வரும் நாட்களில் இன்னும் பல சிமி இயக்கத்தினர் கைது செய்யப்படுவர் என்று காவல் அதிகாரி அன்சுமான் சிங் கூறினார்.
இத்துடன் சேர்ந்து மத்தியப் பிரதேசத்தில் மட்டும் ஒரே வாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள சிமி இயக்கத்தினரின் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளது.