அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றமும், அது தொடர்பான பண வீக்கமும் உலகளாவிய பிரச்சனை என்று காங்கிரஸ் கட்சியின் ஊடகத் தொடர்பு பிரிவின் தலைவர் வீரப்ப மொய்லி கூறியுள்ளார்.
தலைநகர் டெல்லியில் திங்கட்கிழமை செய்தியாளர்களிடம் பேசியுள்ள வீரப்ப மொய்லி, சீனாவில் கடந்த 12 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பண வீக்கம் உயர்ந்திருக்கிறது என்று கூறியுள்ளார்.
அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த மத்திய அரசு தீவிரமாக முயன்று வருகிறது என்றும், விவசாய விளைபொருட்களின் மீதான முன்பேர வர்த்தகத்தை முழுமையாக தடை செய்யுமாறு மத்திய அரசை காங்கிரஸ் கட்சி கேட்டுக்கொள்ளும் என்றும் வீரப்ப மொய்லி கூறினார்.
“இது உணவுப் பொருட்களின் விலையேற்றத்தால் உந்தப்பட்ட பணவீக்கம். சீனத்தின் பணவீக்கம் கடந்த பிப்ரவரியில் 8.7 விழுக்காடாக உயர்ந்தது, இதற்குக் காரணம் பன்றிக் கறி, காய்கறிகளின் விலையேற்றமே. பன்றிக் கறி 63.4 விழுக்காடும், காய்கறிகள் 46 விழுக்காடும் விலை உயர்ந்துள்ளது. இப்படிப்பட்ட விலையேற்றத்தை அந்நாடு கடந்த 12 ஆண்டுகளில் கண்டதில்லை” என்று கூறிய வீரப்ப மொய்லி, அங்கு எண்ணை, பருப்பு விலைகளும் கடுமையாக உயர்ந்துள்ளதென கூறியுள்ளார்.
விலையுயர்வை கட்டுப்படுத்துவது குறித்து விவாதிக்க காங்கிரஸ் கட்சியின் செயற்க்குழு கூடுமா என்று கேட்டதற்கு, அது குறித்து காங்கிரஸ் தலைவர் யோசித்து வருவதாகக் கூறினார்.