தடை செய்யப்பட்ட இந்திய இஸ்லாமிய மாணவர் இயக்கத்தைச் (சிமி) சேர்ந்த 2 பேரை மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் காவல்துறையினர் கைது செய்தனர்.
இந்தூரில் கடந்த வாரம் காவல்துறையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் ரகசியக் கூட்டம் நடத்திக் கொண்டிருந்தபோது கைது செய்யப்பட்ட சிமி இயக்கத்தின் முன்னாள் தலைவர் சஃப்தார் நகோரி மற்றும் அந்த இயக்கத்தின் மற்ற உறுப்பினர்கள் 12 பேருக்கும் தற்போது கைது செய்யப்பட்ட 2 பேர் உதவியிருப்பது தெரியவந்துள்ளது.
இதுகுறித்துச் செய்தியாளர்களிடம் பேசிய இந்தூர் காவல்துறைக் கண்காணிப்பாளர் அன்சுமான் சிங் யாதவ், கைதாகியுள்ள இருவரும் இந்தூரைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்களின் பெயர் அப்துல் ரஷாக் மற்றும் ரைஸ் அகமது கான் என்றும் தெரிவித்தார்.
இவர்கள் இருவரிடமும் தேச விரோதச் செயல்கள் தொடர்பாகவும், சிமி இயக்கத்தின் நடவடிக்கைகள் பற்றியும் தீவிர விசாரணை நடந்து வருகிறது என்றும் காவல் அதிகாரி அன்சுமான் சிங் தெரிவித்தார்.
இதற்கிடையில் ஏற்கெனவே கைதாகியுள்ள நகோரி மற்றும் 12 சிமி இயக்க நிர்வாகிகளின் மீதும் இந்திய அரசிற்கு எதிராகப் போர் தொடுக்கும் நோக்கத்துடன் ஆயுதங்களைச் சேகரித்தல், மதங்களுக்கு இடையில் மோதலை உருவாக்குதல் உள்ளிட்ட குற்றச்சாற்றுகளின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.