திபெத் தொடர்பான நிலைப்பாட்டை சீனா மாற்றிக்கொள்ள வேண்டும் என்று அழுத்தம் கொடுக்கும் வகையில், இந்தியாவும் மற்ற நாடுகளும் சீனப் பொருட்களைப் புறக்கணிக்க வேண்டும் என்று முன்னாள் இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ஜார்ஜ் ஃபெர்ணான்டஸ் வலியுறுத்தியுள்ளார்.
வடோதராவில் மண்டல திபெத் இளைஞர் காங்கிரஸ் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் பேசிய அவர், சீனா தொடர்பாக இந்திய அரசு கொண்டிருக்கும் கொள்கைகளைக் கடுமையாக விமர்சித்தார்.
"இந்தியா சீனாவிடம் சரணடைந்து விட்டது. திபெத் விடுதலை விடயத்தில் எந்தவொரு உறுதியான நிலைபாட்டையும் இந்தியா எடுக்கவில்லை.
சீனாவின் ஏகாதிபத்திய முகம் முழுவதுமாக வெளுத்துவிட்டது. மக்களைக் கொன்று குவிக்கும் கொடூரக் காட்சிகளை உலகம் பார்க்கிறது. திபெத் மக்கள் தற்போது செய் அல்லது செத்துமடி என்ற கட்டாயத்தில் உள்ளனர்.
அப்பாவி மக்களையும், அமைதியாகப் போராடும் மக்களையும் இனப்படுகொலை செய்யுக் காட்சிகள், திபெத்திற்கு ஆதரவாக எல்லா நாடுகளையும் கட்டாயமாக விழித்தெழுச் செய்யும்" என்றார் அவர்.