அணுசக்தி ஒத்துழைப்பு விடயம் பற்றி அமெரிக்காவுடன் பேசும்போது தேச நலன்களைப் பாதுகாக்க மத்திய அரசு எப்போதும் முக்கியத்துவம் கொடுக்கும் என்றும் அனைத்துத் தரப்பினரின் ஆலோசனையையும் பெறாமல் அவசரப்பட்டு எதையும் செய்ய மாட்டோம் என்றும் மத்திய அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறினார்.
மேற்குவங்க மாநிலம் முர்ஷிதா பாத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் பிரணாப் முகர்ஜி, "அமெரிக்காவுடனான அணுசக்தி ஒத்துழைப்பு உடன்பாட்டை எதிர்க்கும் சக்திகளின் மாறுபட்ட கருத்துகளை பொறுமையுடன் கேட்டு அவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்திய பிறகுதான் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும். அவசரப்பட்டு எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது" என்றார்.
அமெரிக்கா விதித்துள்ள காலக்கெடு பற்றிக் கேட்டதற்கு, "இந்தியா போன்ற நாடுகளில் பல்வேறு தரப்பினரின் கருத்துக்களையும் கேட்டறிந்து கவனத்தில் கொள்ள வேண்டிய தேவை உள்ளது. அதற்கு சிறித் காலம் தேவைப்படும் என்றார் அவர்.