தேசிய அளவில் காங்கிரஸ், பா.ஜ.க. கட்சிகளுக்கு மாற்றாக மூன்றாவது அணி அமைக்க இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் அழைப்பு விடுத்துள்ளன.
மக்களுக்கு ஆதரவான கொள்கைகளை கொண்ட மூன்றாவது அணி முயற்சிக்கு ஜனநாயக, மதச்சார்பற்ற சக்திகள் ஆதரவு தெரிவித்துள்ளதாகவும் கம்யூனிஸ்ட் கட்சிகள் கூறியுள்ளன.
"மதவாதத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் பா.ஜ.க., ஆட்சி அதிகாரம் பெறுவதை தடுக்கும் வகையிலான புதிய கொள்கைகளை கொண்ட மூன்றாவது மாற்று அணி அமைப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்" என்று கூறியுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் 'இதுவெறும் தேர்தல் கூட்டணியாக இருக்கக்கூடாது' என்றும் வலியுறுத்தி உள்ளனர்.
கோவையில் இன்று துவங்கிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 19வது அகில இந்திய மாநாட்டில் அக்கட்சியின் பொதுச்செயலர் பிரகாஷ் காரத் பேசுகையில், "மக்களுக்கு சாதகமான பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் சுதந்திரமான அயலுறவு கொள்கைகளுக்கு ஜனநாயக, மதச்சார்பற்ற சக்திகள் ஆதரவு தெரிவித்துள்ளன. அந்த அஸ்திவாரம் முற்றிலும் மதவாதத்திற்கு எதிரான குணங்களை கொண்டிருக்கும்" என்றார்.
இதற்கு ஆதரவளிக்கும் வகையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலர் ஏ.பி.பரதன் கூறுகையில், "காங்கிரஸ், பா.ஜ.க. ஆகிய கட்சிகளுக்கு மாற்றாக இடதுசாரி, ஜனநாயக கட்சிகள் இணைந்து மாற்று அணி அமைக்க இது சரியான காலம். இந்த மாற்று அணி மக்களின் பிரச்சனைகளுக்கு பொதுவான போராட்டத்தின் மூலம் தீர்வு காணும் வகையில் அமைய வேண்டும்" என்று தெரிவித்தார்
"மற்ற கட்சிகளும் மாற்று வழியை தேடி வரும் நிலையில், இடதுசாரி கட்சிகள் அந்த கட்சிகளுடன் கலந்துரையாடி பொது போராட்டத்திற்கான மூன்றாவது மாற்று அணியில் இடம்பெறச்செய்ய முயற்சிக்க வேண்டும். அதற்கு இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் இணைந்து செயல்பட வேண்டும்" என்று அவர் மேலும் கூறினார்.