மக்களைப் பிரித்து ஆள விரும்பும் மதவாத சக்திகளுக்கு எதிராக மதசார்பற்ற சக்திகள் ஒன்றுபட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.
கோவையில் இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 19 ஆவது அகில இந்திய மாநாட்டைத் துவக்கி வைத்துப் பேசிய அக்கட்சியின் பொதுச் செயலர் பிரகாஷ் காரத், "பா.ஜ.க. உள்ளிட்ட மதவாத சக்திகளின் கொள்கைகளுக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராடி வருகிறது. இதனால்தான் எங்களின் மீது வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்படுகிறது" என்றார்.
"கடந்த பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. தோல்வி அடைந்தாலும் ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட மதவாத சக்திகள் சிறுபான்மையினர் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன.
இதனால் வருகின்ற மக்களவைத் தேர்தலில் மக்களைப் பிரித்து ஆள நினைக்கும் பா.ஜ.க. உள்ளிட்ட மதவாத சக்திகளைத் தனிமைப்படுத்தி அவற்றை ஆட்சிக்கு வரவிடாமல் தடுக்கும் பணியில் மார்க்சிஸ்ட் கட்சி தீவிரமாக இறங்கியுள்ளது" என்றும் காரத் குறிப்பிட்டார்.
அடித்தள மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய வேண்டும் அவர்களுக்கு மதசார்பற்ற அரசைத் தரவேண்டும் என்ற விருப்பத்தின் அடிப்படையில்தான் கடந்த 4 ஆண்டாக ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஆதரவு அளித்து வருகிறது என்ற காரத், "ஆனால் மத்திய அரசு வசதி படைத்தவர்களுக்கு பயன்தரக் கூடிய பொருளாதார கொள்கையில்தான் நம்பிக்கை வைத்துள்ளது" என்று குற்றம்சாற்றினார்.
"குறைந்தபட்ச திட்டத்தில் கூறப்பட்ட மக்களுக்கு பயனளிக்கும் முக்கிய அம்சங்களை அரசு இன்னும் நிறைவேற்றவில்லை. ஆனால் தாராளமயமாக்கல், தனியார் மயமாக்கல் திட்டங்கள் பெருமளவு நிறைவேற்றப்பட்டு உள்ளது. அடித்தட்டு மக்களுக்கு எதிரான திட்டங்களை அரசு நிறைவேற்றும்போது அதனை எதிர்த்து போராடுவதில் நாங்கள் பின்வாங்கியதில்லை" என்றார் காரத்.