விலைவாசி அதிகரிப்பு, அதனால் அதிகரித்து வரும் பணவீக்கத்தை பற்றி பரிசீலிக்க திங்கட்கிழமை மத்திய அமைச்சரவையின் உயர் மட்ட குழு கூட்டம் நடைபெற இருப்பதாக நிதி செயலாளர் டி.சுப்பாராவ் தெரிவித்தார்.
டெல்லியில் பங்கு வர்த்தகம் தொடர்பான கருத்தரங்கில் கலந்து கொண்ட சுப்பாராவ் செய்தியாளர்களிடம் கூறுகையில், "விலைவாசி உயர்ந்துள்ளதால், கடந்த 13 மாதமாக இல்லாத அளவு பணவீக்கம் 6.68 விழுக்காடாக அதிகரித்து உள்ளது. விலைவாசி உயர்வு பற்றி பரிசீலிக்க அரசு அமைச்சரவையின் உயர் மட்ட குழு கூட்டம் நடைபெறுகிறது" என்றார்.
முன்னதாக சுப்பாராவ் கருத்தரங்கில் பேசும் போது, "உலக அளவில் பல்வேறு பொருட்களின் விலை அதிகரித்துள்ளது. இதனால் பணவீக்கம் பாதிக்க கூடிய அளவு உயர்ந்துள்ளது. அமெரிக்க பொருளாதாரம் சீர்குலைந்து விட்டது என்ற அச்சத்தால் பல்வேறு பொருட்களின் விலை அதிகரித்து இருக்கினறது.
பொதுவாக வளரும் நாடுகளில் பொருளாதார நெருக்கடி ஏற்படும் போது, உலக அளவில் பொருட்களின் விலை குறையும். முன்பு அமெரிக்காவில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட சமயத்தில், விலைகள் குறைந்துள்ளன. ஆனால் இந்த முறை பொருளாதார நெருக்கடியுடன், விலைகளும் அதிகரித்து உள்ளது" என்று கூறினார்.
இதற்கிடையில், மத்திய வர்த்தக செயலாளர் ஜி.கே.பிள்ளை செய்தியாளர்களிடம் பேசும் போது, மத்திய அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையிலான அமைச்சர்கள் குழு புதன்கிழமை கூடி அரிசி. கோதுமை, சமையல் எண்ணெய் விலை பற்றி பரிசீலிக்க உள்ளது என்று தெரிவித்தார்.