மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 19 ஆவது அகில இந்திய மாநாடு கோவையில் இன்று காலை துவங்கியது. அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு தீர்மானங்களும், விவாதங்களும் அடங்கிய இம்மாநாடு தொடர்ந்து மூன்றாம் தேதி வரை நடக்கிறது. கோவை எஸ்.என்.ஆர். கலையரங்கில் இன்று காலை நடந்த துவக்க நிகழ்ச்சியில் கட்சியின் அகில இந்தியப் பொதுச் செயலர் பிரகாஷ் காரத் மாநாட்டைத் துவக்கி வைத்துப் பேசினார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமைலான இடது முன்னணி ஆளும் மாநிலங்களான கேரள முதல்வர் வி.எஸ். அச்சுதானந்தன், மேற்குவங்க முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா, திரிபுரா முதல்வர் மாணிக் சர்க்கார் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
மேலும், பிருந்தா காரத், சீதாராம் யச்சூரி உள்ளிட்ட கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர்களும், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த கட்சியின் மூத்த தலைவர்களும் துவக்க நிகழ்ச்சியில் பேசினர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டை முன்னிட்டு நாள்தோறும் குறும்படங்களும், ஆவணப்படங்களும் திரையிடப்படுகின்றன. பாடல்கள், பரதநாட்டியம், கருத்தரங்குகள், நாடகம், கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை சர்க்கஸ் மைதானத்தில் நடக்கின்றன.
இம்மாநாட்டின் முக்கிய நிகழ்ச்சியாக ஏப்ரல் 3 ஆம் தேதி மாலை 3 மணிக்கு பிரம்மாண்டமான பேரணி நடக்கிறது. சிவானந்தா காலனியில் நடக்கும் நிகழ்ச்சியில் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் சீதாராம் யச்சூரி பேரணியைத் துவங்கி வைக்கிறார்.
இதன் முடிவில் அன்று மாலை 5 மணிக்கு வ.உ.சி. மைதானத்தில் பிரம்மாண்டமான பொதுக் கூட்டம் நடக்கிறது. இக்கூட்டத்திற்கு கட்சியின் தமிழ் மாநிலக்குழுச் செயலர் என்.வரதராஜன் தலைமை வகிக்கிறார்.