பணவீக்கம் அதிகரிப்பு, விலைவாசி உயர்வு ஆகியவை மத்திய அரசின் தோல்வியை காட்டுகிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.
அக்கட்சியின் 19வது அகில இந்திய மாநாடு கோவையில் இன்று துவங்கியது. இதில் பங்கேற்பதற்காக வந்த கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பிருந்தா காரத் கூறுகையில், "13 மாதங்களில் 6.68 விழுக்காடாக பணவீக்கம் அதிகரித்துள்ளது. உலகளவில் நிலவும் சந்தை மாற்றங்களே இதற்கு காரணம் என்று நிதி அமைச்சர் ப சிதம்பரம் நியாயப்படுத்த முயன்றுள்ளதை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
அடிப்படை பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்துவதில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தோல்வி அடைந்துள்ளது. உணவுப் பொருட்கள் உட்பட அடிப்படை தேவையுள்ள பொருட்களை பொது விநியோக திட்டத்தில் ஏழை மக்களுக்கு வழங்குவதிலும் இந்த அரசு தோல்வி அடைந்து விட்டது" என்றார்.
கேரளா, மேற்குவங்கம் உட்பட பல்வேறு மாநிலங்களில் பொது விநியோக திட்டத்தின்கீழ் வழங்கப்படும் அரிசி, கோதுமை ஒதுக்கீட்டை மத்திய அரசு வெகுவாக குறைத்துள்ளது என்றும் அவர் குற்றம்சாற்றினார்.