விவசாய கடனை ஒட்டு மொத்தமாக எல்லோருக்கும் தள்ளுபடி செய்வதற்கு ராகுல் காந்தி எதிர்ப்பு தெரிவித்தார்.
கர்நாடக மாநிலத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளரான ராகுல் காந்தி கடக் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் மேம்பாட்டு மையத்தில் விவசாயிகளிடம் கலந்துரையாடினார்.
இந்த கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியது பற்றி பி.டி.ஐ. செய்தி தெரிவிப்பதாவது:
அவர் பேசும் போது, விவசாய துறையை முக்கிய தொழில் துறையாக கருத வேண்டும். எல்லா தரப்பு விவசாயிகளும் வாங்கிய கடனை ஒட்டு மொத்தமாக தள்ளுபடி செய்யக்கூடாது. இப்படி செய்தால் வாங்கிய கடனை குறிப்பிட்ட காலத்தில் திருப்பி செலுத்திய ஏழை விவசாயிகளின் நிலை என்ன? என்று கேட்டார்.
மேலும், "விவசாயிகளின் பிரச்சனையை தீர்க்க கடன் வழங்குவதையும், சிறு கடன் அமைப்புகளையும் பலப்படுத்த வேண்டும். எதிர்காலத்தில் நாட்டின் முதன்மையான துறையாக விவசாய துறை இருக்க போகிறது.
நாட்டின் திட்டமிடுதல் விவசாயத்தை மையப்படுத்தி இருக்க வேண்டும். அத்துடன் விவசாயத்தை முதன்மையான துறையாக கருத வேண்டும். விவசாயிகளின் நிலை மேம்பாடடைய இதன் வளர்ச்சிக்கு பாரம்பரிய அனுபவமும், அறிவும் கிராமப்புற மேம்பாடு அவசியமானது.
முந்தைய தேசிய ஜனநாயக கூட்டணி அரசு விவசாய துறையை புறக்கணித்து விட்டது. முன்பு விவசாயம் என்பது காலம் கடந்து போனது, இது முக்கியத்துவம் இல்லாதது என்ற கருத்து நிலவியது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் நிலைமை மாறிவிட்டது" என்று ராகுல் காந்தி பேசியுள்ளார்.