அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் வேட்பாளராக மீண்டும் மன்மோகன் சிங்கை நிறுத்த தேசியவாத காங்கிரஸ் கட்சி (என்.சி.பி.) விருப்பம் தெரிவித்துள்ளது.
"ஜனநாயக முறையில் நேர்மையாகவும், வெளிப்படையாகவும், தலைமைப் பண்புடனும் மன்மோகன் சிங் செயல்பட்டு வருகிறார். அவர் மீது இதுவரை எந்த குற்றச்சாற்றும் இல்லை. கூட்டணி கட்சி ஆட்சியில் மன்மோகன் சிங் போன்ற பிரதமரே தேவை" என்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் திரிபாதி பி.டி.ஐ. செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார்.
"ராகுல் குறித்து காங்கிரஸ் கட்சி முடிவு செய்ய வேண்டும். அதற்கு தேசியவாத காங்கிரஸ் கட்சி தனது வாழ்த்துக்களை தெரிவிக்கிறது" என்றும் திரிபாதி குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு பதிலளித்த காங்கிரஸ் கட்சி, தேர்தல் வரும்போது இதுகுறித்து ஆலோசிக்கப்படும் என்று கூறியுள்ளது.
"பிரதமர் பதவி காலியாக இல்லாத நேரத்தில் எதற்கு அதைப் பற்றி பேச வேண்டும்" என்று காங்கிரஸ் கேட்டுள்ளது.
தங்கள் கட்சியின் அடுத்த தலைவராக ராகுல் காந்தியைத் தேர்வு செய்யும் நிலைப்பாட்டில் காங்கிரஸ் கட்சி செயல்படும் நிலையில், அவர் பிரதமர் பதவிக்கும் நிறுத்தப்படலாம் என்று தேசியவாத காங்கிரஸ் நினைத்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.