Publish Date: Thu, 27 Mar 2008 (18:54 IST)
Updated Date: Thu, 27 Mar 2008 (18:54 IST)
விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தத் தவறிய காங்கிரஸ் தலைமையிலான மத்திய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசைக் கண்டித்து நாடு தழுவிய போராட்டம் நடத்தப்படும் என்று பா.ஜ.க. அறிவித்துள்ளது.
நாடு தழுவிய அளவில் வருகிற ஏப்ரல் ஏழாம் தேதி விலைவாசி உயர்வைக் கண்டித்துத் துவங்கப்படும் போராட்டம் தொடர்ந்து ஒருவாரமும், விவசாயக் கடன் தள்ளுபடித் திட்டத்தில் உள்ள குறைகளைக் கண்டித்துத் துவங்கப்படும் போராட்டம் தொடர்ந்து 2 மாதமும் நடத்தப்படும் என்று பா.ஜ.க. கூறியுள்ளது.
"மத்திய பட்ஜெட், ஏழைகளுக்குச் சாதகமானது என்று ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசினால் அழைத்துக் கொள்ளப்பட்டாலும், அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு இன்னும் விண்ணை முட்டுகிறது. இதற்கான காரணங்களைக் கண்டறிவதிலும் கட்டுப்படுத்துவதிலும் மத்திய அரசு தோல்வியடைந்து விட்டது" என்று பா.ஜ.க.வின் மூத்த தலைவர் ஆனந்த் குமார் கூறினார்.
கர்நாடகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் நடக்கவிருக்கும் சட்டப் பேரவைத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சிக்கு எதிரான ஆயுதமாக, விலைவாசி உயர்வு, விவசாயிகள் தற்கொலை, பணவீக்கம், உள்நாட்டுப் பாதுகாப்பு உள்ளிட்ட விடயங்களைப் பயன்படுத்த பா.ஜ.க. திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில், மத்திய அரசின் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள விவசாயக் கடன் தள்ளுபடித் திட்டத்தில் உள்ள குறைபாடுகள் பா.ஜ.க.விற்குச் சாதகமாகவே உள்ளது.
நாடு முழுவதும் தங்கள் கட்சியின் சார்பில் விவசாயிகள் நடுவர் மன்றங்களை அமைத்து விவசாயிகளுக்கு உள்ள பிரச்சனைகளை கேட்டறிந்து, அவற்றைக் கோரிக்கைகளாக்கி அதன் மூலம் வாக்குகளைத் திரட்டவும் பா.ஜ.க. திட்டமிட்டுள்ளது.
இதுபற்றிக் கேட்டதற்கு "மின் தடை, பூச்சி மருந்து மற்றும் உரத்தட்டுப்பாடு, பாசனக் குறைபாடு, கடன் தள்ளுபடித் திட்டத்தில் குறைபாடு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் தொடர்பாக விவசாயிகளின் கருத்தைக் கேட்டறிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என்றார் ஆனந்த் குமார்.