புதுச்சேரியில் 2008-09ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை முதலமைச்சர் ரங்கசாமி இன்று தாக்கல் செய்தார். அப்போது பல்வேறு அறிவிப்புகளை அவர் வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு:
* ரூ.2 கோடியில் 'துல்லியப் பண்ணை முறை' என்னும் புதிய திட்டம் அறிமுகம். இது கோயம்புத்தூர், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் வேளாண் விஞ்ஞானிகளின் வழிகாட்டுதலின் கீழ் செயல்படுத்தப்படும்.
* விவசாய சுய உதவிக் குழுக்கள் தொடங்கப்படும்.
* கோழிப்பண்ணை விவசாயிகளுக்கு மானிய விலையில் கோழிகள், வான்கோழிகள்.
* வறுமைக்கோட்டிற்குக் கீழ் வாழும் விவசாயிகள் வளர்க்கும் கால்நடைகளுக்கு தீவனம் கிலோ ஒன்றுக்கு ரூ.4.50 மானியம்.
* லிங்காரெட்டிப்பாளையம், மடுகரையில் புதுச்சேரி விற்பனைக் குழுவின் இரண்டு துணை விற்பனை மையங்கள் தொடங்கப்படுகிறது.
* 295 ஏக்கர் பரப்பில் நன்னீர் மீன் வளர்க்கப்படும்.
* 16,000 மீனவர்களுக்கு உயிர்காப்பு சாதனங்கள் இலவசம்.
* 20 மீனவர்களுக்கு, வலைகளுடன் எப்ஆர்பி படகுகள், காக்கிநாடா படகுகள் வாங்குவதற்கு மானியம்.
* பனிக்கட்டி வைக்கும் பெட்டியுடன் கூடிய மோட்டார் சைக்கிள் வாங்குவதற்கு 12 மீனவப் பயனாளிகளுக்கு 50 விழுக்காடு மானியம் அளிக்கப்படும்.
* புதிதாக மீன்பிடி பயிற்சி நிறுவனம் அமைக்கப்படும்.
* மீனவ மகளிர் சுய உதவிக் குழுவிற்கு ரூ.3 லட்சத்திற்கு மிகாமல் முதலீட்டுச் செலவில் 50 விழுக்காடு மானியம்.
* தொழில் செய்யும் போது மரணம் அடையும் மீனவர்களுக்கு ரூ.1.50 நஷ்ட ஈடு.
* விவசாயக் கடன் அளிக்க ரூ.20 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
* பயிர்க் கடனின் மீதான வட்டி 7 விழுக்காட்டிலிருந்து 4 விழுக்காடாகக் குறைப்பு.
* மாநில கூட்டுறவு ஒன்றியம், வேலைவாய்ப்பு அளிக்கும் பாடப்பிரிவுகளைக் கொண்டு தொழில்நுட்பப் பயிற்சி நிலையம் (ஐடிஐ) துவக்கம்.
* 2008-09ம் ஆண்டில் 5,000 கறவை மாடுகள் வாங்கி சுயஉதவிக்குழு உறுப்பினர்களுக்கு 50 விழுக்காடு மானியம்.
* கூட்டுறவு வீட்டு வசதி இணைய உறுப்பினர்கள் 1,000 பேருக்கு ரூ.30 கோடியில் கடன்.
* கூட்டுறவு கட்டட மையம் நிலக்கரிச் சாம்பலைக் கொண்டு கல் தயாரிக்கும் தொழிற்சாலை.
* சிகப்பு நிற குடும்ப அட்டைதாரர்களுக்கு, ரேஷன் கடைகள் மூலம் மானிய விலையில் 5 மளிகைப் பொருட்கள்.
* அயல்நாட்டுவாழ் இந்தியர், இந்திய வம்சா வழியினருக்காக தனியாக இணையதளம் ஒன்று உருவாக்கப்படும்.