டெல்லியில் ஆசிரியர் அடித்ததில் 15 வயது பள்ளி மாணவி மூன்று மாதம் கோமாவில் இருந்து பலியானார்.
கிழக்கு டெல்லியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ரிங்கி கவுசிக் (15) என்ற மாணவி 10ஆம் வகுப்பு படித்து வந்தார். இதே பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்த திரேந்திர குமார் தினகர் என்பவர் மாணவியை, தான் தனியாக நடத்தும் பயிற்சிக்கு படிக்க வருமாறு கட்டாயப்படுத்தினார்.
ஆனால், மாணவி கவுசிக் அவரது தனிப் பயிற்சிக்கு செல்ல மறுத்தார். இதனால் ஆத்திரமடைந்த ஆசிரியர் மாணவியை பிரம்பால் தலை உள்பட பல்வேறு இடங்களில் அடித்தார்.
பலத்த காயத்துடன் மாணவி கவுசிக் கடந்த ஜனவரி 7ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மூளையில் இரத்தம் உறைந்ததால் கோமா நிலையை அடைந்தார்.
இந்நிலையில் கடந்த 3 மாதமாக கோமா நிலையில் இருந்த மாணவி கவுசிக் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு இறந்தார். இதையடுத்து அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர், ஆசிரியர் மீது வழக்குப்பதிவு செய்து ஆசிரியரை கைது செய்தனர்.
இதற்கிடையே அந்த பள்ளிக்கு வழங்கப்பட்ட அங்கீகாரத்தை ரத்து செய்ததோடு, பலியான மாணவி குடும்பத்துக்கு ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று டெல்லி அரசு அறிவித்துள்ளது. மேலும், மாணவி பலியானது குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.