Publish Date: Thu, 27 Mar 2008 (15:35 IST)
Updated Date: Thu, 27 Mar 2008 (15:24 IST)
மத்திய வர்த்தக அமைச்சர் கமல் நாத்தின் சீனப் பயணத்தை ரத்து செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
டெல்லியில் திபெத்தியர்கள் நடத்திய போராட்டத்திற்காக இந்தியத் தூதரை நள்ளிரவில் அழைத்துக் கண்டனம் தெரிவித்த சீன அரசின் செயலைக் கண்டித்து இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகக் கருதப்படுகிறது.
சீன அரசைக் கண்டித்து டெல்லியில் போராட்டம் நடத்திய திபெத்தியர்கள் சீனத் தூதரகத்திற்குள் நுழைந்ததுடன், அங்கிருந்த சீனக் கொடியை இறக்கிவிட்டு தங்கள் கொடியினை ஏற்ற முயன்றனர். அவர்களைக் காவல்துறையினர் தடுத்து வெளியேற்றினர்.
தங்கள் நாட்டுத் தூதரகத்திற்குள் திபெத்தியர்கள் நுழைய அனுமதித்தது குறித்து அதிருப்தி தெரிவித்த சீன அயலுறவுத் துறை, பெய்ஜிங்கில் உள்ள இந்தியத் தூதர் நிருபமா ராவை இருமுறை அழைத்துக் கண்டனம் தெரிவித்தது. அதிலும் ஒருமுறை நள்ளிரவில் அழைத்து கண்டனத்தைத் தெரிவித்தது.
மேலும், பெய்ஜிங்கில் நடக்கவுள்ள ஒலிம்பிக் போட்டிகளுக்கான ஜோதியின் பயணம் இந்தியாவில் உரிய பாதுகாப்புடன் நடக்குமா என்றும் சீனா சந்தேகம் தெரிவித்தது.
சீன அரசின் இத்தகைய செயல்களுக்கு இந்திய அரசு இதுவரை எந்தவிதமான கருத்தும் வெளியிடாமல் இருந்து வந்தது.
இந்நிலையில், பல்வேறு வணிக ஒப்பந்தங்கள் தொடர்பாக அடுத்த வாரம் சீனா செல்லவிருந்த மத்திய வர்த்தக அமைச்சர் கமல் நாத்தின் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
கமல் நாத் மறுப்பு!
ஆனால், சீனாவிற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் எண்ணம் எதுவும் இல்லை என்றும், தேதி குழுப்பத்தின் காரணமாகவே பயணம் ரத்து செய்யப்பட்டதாகவும் கமல் நாத் தெரிவித்தார்.
புதிய தேதிகள் முடிவு செய்யப்பட்டவுடன் தனது பயணம் தொடரும் என்றும் அவர் கூறினார்.
முன்னதாக, டெல்லியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன், "ஒலிம்பிக் ஜோதிக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும். அதற்குத் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.
இந்தியாவின் 20 நகரங்களுக்கு ஜோதி கொண்டு செல்லப்படும். செல்லும் இடங்களில் எல்லாம் போதுமான பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே சீனா இதுகுறித்து கவலை கொள்ளத் தேவையில்லை" என்று தெரிவித்தார்.