பாகிஸ்தான்- ஆஃப்கானிஸ்தான் எல்லையில் முகாமிட்டிருக்கும் பயங்கரவாதிகள் இந்தியாவில் நுழைந்து தாக்குதல் நடத்துவது தொடர்ந்து வருகிறது என்று இந்தியாவின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் கூறினார்.
பாகிஸ்தான் எல்லையை பயங்கரவாதிகளின் கூடாரம் என்று குறிப்பிட்ட அவர், பாகிஸ்தான் உளவு நிறுவனமான ஐ.எஸ்.ஐ.யின் பயங்கரவாதிகளுக்கு உதவும் போக்கில் இதுவரை எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்றும் குற்றம்சாற்றினார்.
இந்திய விமானப்படைத் தளபதி பி.சி.லாலின் 25 ஆம் ஆவது ஆண்டு நினைவு நாள் நிகழ்வில் உரையாற்றிய எம்.கே.நாராயணன், பாகிஸ்தானால் இந்தியாவிற்கு உள்ள அச்சுறுத்தல் குறித்துக் கூறியதாவது:
லஷ்கர் இ தாயிபா, ஜெய்ஷ் இ முகமது உள்ளிட்ட பயங்கரவாத இயக்கங்களுக்கு ஆலோசனை வழங்கி தாக்குதல் நடத்துவதற்கான திட்டங்களைத் தீட்டித் தரும் ஐ.எஸ்.ஐ.யின் போக்கில் இதுவரை எந்த மாற்றமும் இல்லை. பாகிஸ்தான் பயங்கரவாதிகளால் இந்தியாவில் நடத்தப்படும் தாக்குதல்கள் தொடர்கிறது.
பாகிஸ்தான் தீவிரவாதச் சக்திகள், மத அடிப்படைவாத இயக்கங்கள் போன்றவற்றால் இந்திய மண்ணில் தாக்குதல்களை நடத்துவதற்கு வங்கதேசம் பயன்படுத்தப்படுவது தொடர்கிறது.
பாகிஸ்தானைச் சேர்ந்த மத அடிப்படைவாத இயக்கங்களிடம் இந்தியாவிற்கு எதிரான கொள்கைகளும், உணர்வுகளும் இல்லை என்று யாராலும் மறுக்க முடியாது.
இந்தியா சுதந்திரம் பெற்ற காலத்தில் இருந்து பாகிஸ்தானின் இத்தகைய பிரச்சனைகளுடன் போராடுவது வழக்கமாகி விட்டது.
பயங்கரவாதத் தாக்குதல்களால் நீண்டகாலமாக பாதிக்கப்பட்டு வந்தாலும், பூரணச் சகிப்புக் கொள்கையை இந்தியா பின்பற்றி வருகிறது. பாகிஸ்தானில் ஜனநாயகம் நிலைநாட்டப்பட வேண்டும் என்பதிலும், அங்கு நிலையான அரசு உருவாக வேண்டும் என்பதிலும் இந்தியா உறுதியாக உள்ளது.
இவ்வாறு எம்.கே.நாராயணன் கூறினார்.