2002 ஆம் ஆண்டு கோத்ரா இரயில் எரிப்பையடுத்து கலவரங்கள் தொடர்பான பத்து வழக்குகளை மறுவிசாரணை செய்வதற்கு 10 நாட்களுக்குள் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்க வேண்டும் என்றும், விசாரணையை விரைவாக நடத்த வேண்டும் என்றும் குஜராத் மாநில அரசிற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், சிறப்புப் புலனாய்வுக் குழு தனது அறிக்கையை 3 மாதங்களுக்குள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குஜராத் கலவரம் தொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையம் தொடர்ந்துள்ள வழக்கை விசாரித்த நீதிபதிகள் அர்ஜித் பசாயத், பி.சதாசிவம், அஃதாப் ஆலம் ஆகியோர் அடங்கிய நீதிமன்ற அமர்வு இந்த உத்தரவைப் பிறப்பித்தது.
சிறப்புப் புலனாய்வுக் குழு கோத்ரா கலவர வழக்குகளில் முழு சுதந்திரத்துடன் செயல்படலாம் என்று நீதிமன்றம் கூறியுள்ளது.
மொத்தம் 5 பேர் சிறப்புப் புலனாய்வுக் குழுவில் குஜராத்தைச் சேர்ந்த கீதா ஜோஹ்ரி, சிவானந்த் ஜா, அபிஷ் பாட்டியா ஆகிய 3 ஐ.பி.எஸ். அதிகாரிகளும், ஓய்வுபெற்ற ம.பு.க. இயக்குநர் ஆர்.கே.ராகவன், முன்னால் டி.ஜி.பி. சி.பி. சத்பதி ஆகியோரும் உள்ளனர்.
இதில் ராகவன் குழுவின் தலைவராகவும், ஜோஹ்ரி குழுவின் ஒருங்கிணைப்பாளராகவும் செயல்படுவர்.
மறுவிசாரணை செய்யப்படவுள்ள 10 வழக்குகள் தொடர்பான கலவரங்கள் 7 இடங்களில் நடந்துள்ளன.
கோத்ராவில் 81 பேர் கொல்லப்பட்டது, குல்பர்கா சமூகப் பகுதியில் 68 பேர் கொல்லப்பட்டது, நரோடா பாட்டியாவில் 100 பேர் கொல்லப்பட்டது, சர்தார்பூரில் 34 பேர் கொல்லப்பட்டது, பெஸ்ட் பேக்கரியில் 14 பேர் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டது போன்றவை இதில் குறிப்பிடத்தக்கவை.
முன்னதாக, கோத்ராவில் சபர்மதி இரயில் எரிக்கப்பட்ட பிறகு நடந்த கலவரங்களில் சுமார் 1,000 பேர் கொல்லப்பட்டதாக அரசு அறிவித்தது.
ஆனால், இக்கலவரங்களில் 2,000 க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டதாகவும், 1.5 லட்சம் பேர் இடம் பெயர்ந்ததாகவும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.