Publish Date: Wed, 26 Mar 2008 (13:14 IST)
Updated Date: Wed, 26 Mar 2008 (13:14 IST)
இந்திய- அமெரிக்க அணுசக்தி ஒத்துழைப்பு உடன்பாடு விடயத்தில் அரசியல் கட்சிகளிடையில் கருத்தொற்றுமையை ஏற்படுத்த மத்திய அரசு தொடர்ந்து முயற்சித்து வருவதாக மத்திய அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறினார்.
அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அமைச்சர் பிரணாப் முகர்ஜி வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் கூறுகையில், "தற்போதைய நிலைமைகளின் அடிப்படையில் இந்திய- அமெரிக்க அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதற்கான காலவரையறை எதையும் என்னால் குறிப்பிட முடியாது. இந்த விடயத்தில் இந்திய அரசிற்கு ஆதரவளிக்கும் சில கட்சிகளிடையில் கருத்து வேறுபாடு நிலவுகிறது. அவற்றைத் தீர்க்க நாங்கள் முயற்சித்து வருகிறோம். ஆனால் அதற்குச் சில காலம் ஆகும்" என்றார்.
"இயற்கை வளங்கள் குறைந்துவரும் நிலையில் ஒரு மாற்று வளமாக அணுசக்தி உள்ளதை நாங்கள் உணர்ந்துள்ளோம். மாசில்லா இந்த வளத்தைப் பற்றி எடுத்துரைத்து அனைவரிடமும் கருத்தொற்றுமையை ஏற்படுத்த தொடர்ந்து முயற்சிப்போம்" என்றும் அவர் கூறினார்.