சீனாவிற்கு எதிராக திபெத்தியர்கள் நடத்திவரும் போராட்டத்தை வன்மையாகக் கண்டித்துள்ள தலாய் லாமா, வன்முறைகள் தொடருமானால் பதவி விலகுவேன் என்று எச்சரித்துள்ளார்.
டெல்லியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த தலாய் லாமா, "நான் எப்போதும் சீன மக்களையும், கம்யூனிசத்தையும் மதிக்கிறேன். போராடிவரும் திபெத்தியர்களில் பெரும்பாலானவர்கள் தத்துவரீதியாகக் கம்யூனிசத்தை ஆதரிப்பவர்கள்தான். சீனாவிற்கு உள்ளும் புறமும் நடப்பதை நான் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறேன். வன்முறைகளின் அடிப்படையிலான போராட்டங்களை நான் முற்றிலுமாக எதிர்க்கிறேன்" என்றார்.
"ஆழமான உணர்வுகளின் வெளிப்பாடுகள் எப்போதும் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்று நான் தெளிவாகக் கூறியுள்ளேன். ஒருவேளை அது கட்டுப்பாட்டை மீறுமானால் வேறு வழியில்லை. வன்முறைகளின் அடிப்படையிலான போராட்டங்கள் தொடருமானால் நான் பதவி விலகுவேன்" என்றும் அவர் கூறினார்.
திபெத்தில் நடந்து வரும் போராட்டங்களின் முடிவு பற்றியும், பிரச்சனைக்கான தீர்வு பற்றியும் கேட்டதற்கு, "பொறுத்திருந்து பாருங்கள்" என்றார் அவர்.