'என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட்' என்று அழைக்கப்பட்ட டெல்லி காவல்துறை கூடுதல் ஆணையர் ரஜ்பிர் சிங் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.
ஹரியானா மாநிலம் குர்கானில் தொழிலதிபர் விஜய் பரத்வாஜ் என்பவரால் நேற்று இரவு 10.30 மணியளவில் ரஜ்பிர் சிங் சுட்டுக் கொலை செய்யப்பட்டதாக டெல்லி காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். இதனை குர்கான் காவல்துறை ஆணையர் மகேந்திர லாலும் உறுதிப்படுத்தியுள்ளார்.
விஜய் பரத்வாஜ் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த நிகழ்வு குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இருவருக்கும் இடையேயான பணத் தகராறில் ஆத்திரமடைந்த பரத்வாஜ் ரஜ்பிரை சுட்டதாக கூறப்படுகிறது.
ரஜ்பிர் சிங் தனது துணிச்சல் மிகுந்த பணிக்காக குடியரசுத் தலைவரிடம் இருந்து பல விருதுகளை பெற்றுள்ளார். மொத்தம் 56 'என்கவுன்டர்' நிகழ்த்தியுள்ள அவருக்கு 'இஸட்' பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டது.
கடந்த ஆண்டு சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காக ரஜ்பிர் சிங் கடந்த நவம்பரில் டெல்லி குற்றப்பிரிவு சிறப்பு படை கூடுதல் ஆணையராக நியமிக்கப்பட்டார். எனினும், டெல்லி காவல்துறை வரலாற்றில் 13 ஆண்டுகால பணியில் கூடுதல் ஆணையராக நியமிக்கப்பட்ட முதல் நபர் ரஜ்பிர் சிங்.
கடந்த 1982-ம் ஆண்டு அவரது 24-வது வயதில் டெல்லி காவல்துறையில் உதவி ஆய்வாளாராக நியமிக்கப்பட்டார். அப்போதிருந்தே அவரது வளர்ச்சி சர்ச்சைக்குரியதாக உள்ளது. குறிப்பாக, 2002 நவம்பர் 3-ம் தேதி தெற்கு டெல்லியில் அன்சல் பிளாசாவில் இரண்டு தீவிரவாதிகளை இவர் சுட்டுக்கொன்ற சம்பவம் பெரும் சர்ச்சையை உருவாக்கியது.