அமெரிக்க வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ், இந்திய அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி ஆகியோரின் சந்திப்பில், இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் உட்பட இருநாடுகளுடனான உறவுகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
இரண்டு நாள் அரசுமுறை பயணமாக அமெரிக்க சென்ற அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி அந்நாட்டின் அயலுறவு அமைச்சர் காண்டலீசா ரைஸ், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஸ்டீபன் ஹாட்லே ஆகியோரை சந்தித்து பேசினார்.
இரண்டாவது கட்டமாக நேற்று இரவு நடந்த ரைஸ் உடனான சந்திப்பில் அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
அதிபர் புஷ் உடனான சந்திப்பில் சர்வதேச, உள்நாட்டு விவகாரங்கள் குறித்தும், இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் உட்பட இருநாடுகளுடனான உறவுகள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது. 30 நிமிடங்கள் நீடித்த இந்த சந்திப்பு துவங்கியவுடன் அதிபர் புஷ், அமைச்சர் பிரணாப் முகர்ஜியை சந்தித்து பேசும் புகைப்படம் வெள்ளை மாளிகை இணையதளத்தில் வெளியிடப்பட்டது. மற்றபடி, சந்திப்பில் விவாதிக்கப்பட்ட தகவல்கள் எதையும் இருநாடுகளும் வெளியிடவில்லை.
இந்த சந்திப்பிற்கு முன்னதாக, வெள்ளை மாளிகை செய்தித்தொடர்பாளர் டானா பெரினோ கூறுகையில், 'இந்தியாவின் அயலுறவு அமைச்சரை சந்திப்பதில் அதிபர் புஷ் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளார். இதில் பல முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்படும். இந்தியாவுடன் அணுசக்தி ஒப்பந்தம் உட்பட பல்வேறு விவகாரங்களில் ஆழமான, பரந்த உறவை அமெரிக்கா கொண்டுள்ளது' என்றார்.
அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி பொறுப்பேற்ற மூன்று ஆண்டுகளில் அமெரிக்கா சென்றது இதுவே முதன்முறை. இந்நிலையில் அதிபர் புஷ், மற்ற அமெரிக்க தலைவர்களுடன் நடந்த சந்திப்பு, இரண்டுநாள் பயணம் ஆகியவற்றின் முழு தகவல்களையும் இன்று பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் அமைச்சர் பிரணாப் முகர்ஜி வெளியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.