போதைப் பொருள் கடத்தல், சர்வதேச பயங்கரவாதம், பாதுகாப்பு மேம்பாடு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக இந்தியாவிற்கும் வியட்நாமிற்கும் இடையில் ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வியட்நாம் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் லீ ஹாங் அன் டெல்லியில் இன்று மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீலைச் சந்தித்தார்.
அப்போது, சர்வதேசக் குற்றங்கள், பயங்கரவாதம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்த விவாதங்கள் நடந்தன.
இதையடுத்து பல்வேறு பாதுகாப்பு விடயங்கள் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானதாக இந்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
இதன் மூலம், வங்கி மோசடி வழக்குகள், கூட்டுச் சதி, நிதி மோசடி, பொருளாதாரக் குற்றங்கள், போதைப் பொருள் கடத்தல், இணையதளக் குற்றங்கள், அறிவியல் புலனாய்வு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு முடிவு எட்டப்படும்.