திபெத் விடுதலையை வலியுறுத்திப் போராட்டம் நடத்திவரும் திபெத்தியர்கள் இன்று இந்திய எல்லைக்குள் நுழைய முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
சீன எதிர்ப்பு முழக்கங்களை எழுப்பியபடி இந்திய எல்லைக்குள் நுழைய முயன்ற சுமார் 400 க்கும் மேற்பட்ட புத்த மதத் துறவிகள் உள்ளிட்ட திபெத்தியர்களை சிக்கிம் காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.
சிக்கிம் வழியாக நாது லா பகுதி வரை அமைதி ஊர்வலம் நடத்தத் திட்டமிட்டு இருந்ததாகத் திருப்பி அனுப்பப்பட்ட திபெத்தியர்கள் தெரிவித்தனர்.
"முறையான அனுமதியின்றி இந்திய எல்லைக்குள் நுழைபவர்களை நாங்கள் அனுமதிக்க முடியாது. அத்துமீறி நுழைய முயன்ற திபெத்தியர்கள் மட்டும் தடுத்து நிறுத்தப்பட்டனர்" என்று காவல்துறைக் கண்காணிப்பாளர் எம்.எஸ்.துலி கூறினார்.
இதேபோல மேற்குவங்க மாநிலம் ராங்போ சோதனைச் சாவடியிலும் திபெத்தியர்கள் போராட்டத்தை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.