அந்தமான், நிகோபார் தீவுகளில் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலவச வீடுகளை மாதா அமிர்தானந்தமயி வழங்கினார்.
கடந்த 2002 ஆம் ஆண்டு தாக்கிய சுனாமியால் வடக்கு அந்தமான் தீவில் உள்ள மூங்கில் காடு பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டது. இங்கு சுமார் 10,000 க்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் வீடுகளை இழந்தனர்.
இம்மக்களுக்கு மாதா அமிர்தானந்தமயி மடம் பல்வேறு நிவாரண உதவிகளை வழங்கியது. அத்துடன் மூங்கில் காடு, அஸ்டினாபாத் பகுதியில் உள்ள 200 குடும்பங்களுக்கு புதிதாக வீடுகள் கட்டிக் கொடுக்கவும் திட்டமிட்டது.
அதனடிப்படையில் முதல் கட்டமாக நிலநடுக்கத்தைத் தாங்கும் உறுதியுடனும், வெள்ளம் புகாத வகையிலும் 50 வீடுகள் கட்டப்பட்டன.
அந்தமான் தலைநகர் ஃபோர்ட் பிளேரில் நடந்த நிகழ்ச்சியில் இவ்வீடுகளின் சாவிகளை மாதா அமிர்தானந்தமயி பயனாளிகளிடம் ஒப்படைந்தார். அவற்றை அரசின் சார்பில் மத்திய மனிதவள இணையமைச்சர் எம்.ஏ.ஏ.ஃபாத்மி பெற்றுக்கொண்டார்.
நிகழ்ச்சி மேடையில் 10 பேருக்கு உடனடியாக வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் 10,000 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்றதுடன், மாதா அமிர்தானந்தமயியைச் சந்தித்து ஆசி பெற்றனர்.
மாதா அமிர்தானந்தமயி மடம் சார்பில் இரண்டாம் கட்டமாகக் கட்டப்பட்டு வரும் 250 வீடுகளின் கட்டுமானப் பணிகள் அடுத்த மாதம் முடிந்து விடும் என்று மடத்தின் நிர்வாகிகள் தெரிவித்தனர்.