அமெரிக்கா சென்றுள்ள இந்திய அயலுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி இன்று அந்நாட்டு அதிபர் ஜார்ஜ் புஷ்சை சந்தித்து அணுசக்தி ஒப்பந்தம் குறித்து ஆலோசனை நடத்துகிறார்.
இரண்டு நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள அவர், பயணத்தின் முதல் கட்டமாக அமெரிக்க அயலுறவுத்துறை அமைச்சர் கண்டலீசா ரைசை சந்தித்து அணு சக்தி ஒப்பந்தம் உட்பட இரு தரப்பு உறவுகள் குறித்து ஆலோசனை நடத்துகிறார்.
பின்னர், அமெரிக்க வெள்ளை மாளிகைக்கு சென்று, அதிபர் புஷ்சை சந்திக்கும் அவர், இரு நாடுகளுக்கு இடையே பல்வேறு துறைகள் தொடர்பான உறவு, தேசிய, சர்வதேச பிரச்சினைகள், அணுசக்தி ஒப்பந்தம் ஆகியவை குறித்து ஆலோசனை நடத்த உள்ளார்.
அணுசக்தி ஒப்பந்தத்தை வரும் மே மாதத்துக்குள் இறுதி செய்யுமாறு அமெரிக்கா கெடு விதித்து உள்ள நிலையில் பிரணாப் முகர்ஜியின் இந்த பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இதற்கிடையே, இந்தியா- அமெரிக்கா இடையேயான அணுசக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்றக்கூடாது, அவ்வாறு நிறைவேற்றினால் மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவை விலக்கிக்கொள்வோம் என்று கம்யூனிஸ்ட் கட்சிகள் எச்சரித்து வருவது குறிப்பிடத்தக்கது.