உணவுப் பொருட்களில் கலப்படம் செய்வது உங்களுக்கு தெரியும். பாலில் தண்ணீர் ஊற்றுவார்கள். சில நேரங்களில் தண்ணீரில் பாலை கலப்பார்கள்.
இதனை எல்லாம் மிஞ்சும் வகையில், இராசயண பொருட்களை பயன்படுத்தி செயற்கையாக பால் தயாரித்துள்ளனர்.
செயற்கையான பால் என்றவுடன், மரபு அணு மாற்றம் செய்து பருத்தி சாகுபடி, பூசணிக்காய் அளவு கத்திரி, தக்காளி பரிசோதனை சாலையில் ஆராய்ச்சி என்று நினைத்து விடாதீர்கள்.
இந்த அதிசயம் சாட்சாத் நமது பஞ்சாப் மாநிலத்தில் தான் நடந்துள்ளது.
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ராஜ்புரா என்ற ஊரில் காஸ்டிக் சோடா என்ற இரசாயன பொருளை கொண்டு பால் தயாரிப்பதாக காவல் துறைக்கு, பொது மக்கள் மீது அனுதாபம் கொண்ட, நல விரும்பி ஒருவர் ரகசியமாக தகவல் கொடுத்தார்.
காவல் துறையினரால் நம்வே முடியவில்லை.
பசு, எருமை மாடுதான் பால் கொடுக்கும். செயற்கையாக பாலை எப்படி தயாரிக்க முடியும் என்ற சந்தேகம் ஏற்பட்டது. இருந்தாலும் ரகசிய தகவலை உதாசீனப்படுத்தாமல் ராஜ்புரா காவல் துறையினர், பால் பண்ணையில் திடீரென சோதனை நடத்தினர்.
காவல் துறையினருக்கு அதிர்ச்சி, அவர்களால் நம்பவே முடியவில்லை. இராசயண பொருட்களை கொண்டு தயாரிக்கப்பட்ட பால் இரண்டு கன்டெய்னர்களில் இருந்தது. பத்து லிட்டரோ, இருபது லிட்டரோ அல்ல, 25 ஆயிரம் லிட்டர்.
இந்த எமபாதக செயலை செய்த மூன்று பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.
அந்த ரசாயன பால் பண்ணையில் 37 மூட்டை காஸ்டிக் சோடா, 15 மூட்டை பால் பவுடர், நெய் மற்றும் பால் தயாரிப்பதற்கான இயந்திரம் இருந்தது.
இவற்றை காவல் துறையினர் கைப்பற்றினார்கள்.
காவல் துறையினரின் அன்பான உபசரிப்பில் அந்த மூன்று பேரும், தாங்கள் கடந்த இரண்டு வருடமாக இராசயணத்தை பயன்படுத்தி செயற்கை பாலை தயாரிப்பதாகவும், இந்த பாலை பல இடங்களில் விற்பனை செய்துள்ளதையும் ஒத்துக் கொண்டனர்.
இவர்கள் மீது இந்திய குற்றவியல் சட்ட பிரிவுகள் 420, 273,274 படி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இது ஏதோ பஞ்சாப் மாநிலத்தில் தானே நடந்துள்ளது என்று செய்தியை படிப்பதுடன் நிம்மதி பெருமூச்சு விடாதீர்கள்.
நீங்கள் வாங்கும் பால் தரமானது தானா, கால் நடைகளிடம் இருந்து கறந்த இயற்கை பாலா அல்லது காஸ்டிக் சோடா போன்ற உடலுக்கு ஆபத்தை விளைவிக்கும் இரசாயன பொருட்களை கலந்து தயாரிக்கப்பட்ட செயற்கை பாலா என்பதை உறுதி செய்து கொண்டு பால் வாங்குங்கள்.
காஸ்டிக் சோடா பற்றிய முழு விபரம் அறிய உங்கள் வீட்டிற்கு அருகாமையில் உள்ள இரசாயன பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளில் சென்று கேட்டு பாருங்கள். அதன் அருமை பெருமைகளை விவரிப்பார்கள்.