இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க நாடாளுமன்ற அவைத் தலைவர் நான்சி பெலோசி இன்று புத்த மதத் தலைவர் தலாய் லாமாவைச் சந்தித்தார்.
திபெத்தில் நடந்தது வரும் போராட்டங்களுக்கு தலாய் லாமா மூளையாக இருந்து செயல்பட்டு வருகிறார் என்று சீன அரசு குற்றம்சாற்றியுள்ள நிலையில், தலாய் லாமாவைச் சந்தித்த பெலோசி, திபெத்தில் தற்போது நிலவும் சூழ்நிலை அமெரிக்காவிற்கு மிகவும் கவலை அளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
இச்சந்திப்பின் போது பெலோசியுடன் 9 அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களும் உடனிருந்தனர்.
தலாய் லாமாவைப் பெலோசி சந்திக்கக் கூடாது என்று சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில் நடந்ததுள்ள இச்சந்திப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
முன்னதாக, திபெத்தில் நடந்துவரும் போராட்ட விவகாரத்தில் சீனா மிகவும் கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும், மக்களின் ஆதரவுபெற்ற மதத் தலைவரான தலாய் லாமாவுடன் அமைதியான முறையில் பேச்சு நடத்துவதற்குச் சீனா முன்வர வேண்டும் என்றும் அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.