ராஜஸ்தான் பாலைவனத்தில் நடந்துவரும் போர்ப் பயிற்சியில் நடந்த வெடி விபத்தில் 3 ராணுவத்தினர் பலியானதுடன், ஒரு அதிகாரி உட்பட 2 பேர் படுகாயமடைந்தனர்.
ராஜஸ்தான் மாநிலத்தில் இந்திய- பாகிஸ்தான் எல்லையில் உள்ள பாலைவனப் பகுதியில் இந்திய ராணுவமும், விமானப் படையும் இணைந்து கூட்டுப் போர்ப் பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.
இப்பயிற்சியில் ராணுவத்தினர் பயன்படுத்திய மோர்ட்டார் குண்டு இலக்கிற்கு முன்னதாக வெடித்துச் சிதறியது. இதில் 3 ராணுவத்தினர் கொல்லப்பட்டனர். மேலும், இளநிலை அதிகாரி ஒருவர் உட்பட 2 பேர் படுகாயமடைந்தனர்.
இவ்விபத்து குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளதாக ராணுவப் பேச்சாளர் தெரிவித்தார்.
கடந்த சில ஆண்டுகளில் நமது ராணுவத்தினர் மேற்கொண்ட போர்ப் பயிற்சிகளில் இதுதான் மிகப்பெரியது என்பதும், இதைப் பார்வையிட அயல்நாடுகளில் இருந்து வல்லுநர்கள் வந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.