பாகிஸ்தானில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள இந்தியரான சரப்ஜித் சிங்கை விடுதலை செய்வதற்கு பதிலாக இந்தியாவில் உள்ள பாகிஸ்தான் சிறைக் கைதி யாரையும் விடுதலை செய்யவில்லை என்று மத்திய அரசு இன்று கூறியுள்ளது.
இது தொடர்பாக மத்திய உள்துறை இணை அமைச்சர் ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஸ்வால் கூறுகையில், "பாகிஸ்தான் அரசிடம் முறையீடு செய்துள்ளோம். பாகிஸ்தான் நம்முடைய முறையீட்டை கவனத்தில் கொள்ளும் என்று நம்புகிறோம். சரப்ஜித்சிங்குக்கு பதிலாக யாரையும் விடுதலை செய்யவில்லை" என்றார்.
இந்திய அரசு பாகிஸ்தான் அரசுக்கு விடுத்த வேண்டுகோளை அடுத்து நேற்று அதிபர் பர்வேஷ் முஷாரப், சரப்ஜித் சிங்குக்கு விதிக்கப்பட இருந்த தூக்கு தண்டனையை ஏப்ரல் 1ம் தேதிக்கு பதிலாக 30 நாட்கள் தள்ளி வைத்தார்.
பாகிஸ்தானின் லாகூர், முல்டான் நகரங்களில் கடந்த 1991 ஆம் ஆண்டு நடந்த தொடர்குண்டு வெடிப்புகளில் தொடர்புடைய குற்றத்திற்காக சரப்ஜித் சிங் கைது செய்யப்பட்டார். அவரது குடும்பத்தார் அவர் உளவு பார்க்க வரவில்லை தற்செயலாக பாதை மாறி பாகிஸ்தான் எல்லைக்குள் வந்து விட்டதாக கூறினர்.