சர்ச்சைக்குரிய வங்கதேசப் பெண் எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரீன் இன்று இந்தியாவில் இருந்து ரகசிய இடத்திற்கு வெளியேறினார்.
டெல்லியில் இருந்து இன்று காலை பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் புறப்பட்ட தஸ்லிமா, வழியில் லண்டனின் ஹீத்ரோ விமான நிலையத்தில் இருந்து பேசுகையில், மத அடிப்படை வாதிகளிடம் சிக்கியிருப்பதை விட இந்திய அரசிடம் இருப்பது ஒன்றும் அவ்வளவு வித்தியாசமாக இல்லை என்றதாக பி.டி.ஐ. செய்தி கூறுகிறது.
எங்கு செல்கிறீர்கள் என்று கேட்டதற்கு தன்னுடைய பாதுகாப்பு விடயத்தில் சமரசம் செய்துகொள்ளத் தான் விரும்பவில்லை என்றார்.
"நான் செல்லும் இடத்தைத் தெரிவித்தால் என்னுடைய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படும். எனது முகம் அனைவருக்கும் தெரியும் என்பதால், மத அடிப்படைவாதிகளின் இலக்காக நான் மாறக்கூடும்" என்றார் தஸ்லிமா.
கொல்கட்டாவில் இருந்து வெளியேறிய பிறகு கடந்த 4 மாதங்களாக டெல்லியில் மத்திய அரசின் பாதுகாப்பில் ரகசிய இடத்தில் தங்க வைக்கப்பட்டு இருந்த தஸ்லிமா, தனது சுதந்திரம் பறிக்கப்பட்டு உள்ளதாகக் குற்றம்சாற்றி இருந்தார்.