ஜம்மு- காஷ்மீரில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த மோதலில் பாகிஸ்தான் நாட்டவர் ஒருவர் உள்பட 4 லஷ்கர்- இ தாயிபா இயக்கத் தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
தோடா மாவட்டம் கண்டோ பகுதியில் இன்று அதிகாலை பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையின் போது, வனப்பகுதியில் பதுங்கியிருந்த தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது.
சுமார் 3 மணி நேரம் நடந்த துப்பாக்கிச் சண்டையில் பாகிஸ்தான் நாட்டவர் ஒருவர் உட்பட 4 லஸ்கர்- இ தாயிபா இயக்கத் தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக பாதுகாப்புப் படைப் பேச்சாளர் கோஸ்வாமி தெரிவித்தார்.
மோதல் நடந்த இடத்தில் இருந்து 3 ஏ.கே.47 துப்பாக்கிகள் உள்பட பல்வேறு ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், தொடர்ந்து தேடுதல் வேட்டை நடந்து வருவதாகவும் அவர் கூறினார்.
வெடிபொருட்கள் பறிமுதல்!
இதற்கிடையில் தோடா மாவட்டத்தின் பட்ரோட்டா பகுதியில் உள்ள மலைக் குகையில் இருந்து 10 கிலோ ஆர்.டி.எக்ஸ். உள்பட ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இவற்றைத் தீவிரவாதிகள் பதுக்கி வைத்திருக்கலாம் என்று பாதுகாப்புத் தரப்பு அதிகாரிகள் கூறியுள்ளனர்.