பாகிஸ்தான் சிறையில் உள்ள இந்தியரான சரப்ஜித் சிங்கிற்கு விதிக்கப்பட்டுள்ள தூக்கு தண்டனையை நிறைவேற்றும் நடவடிக்கை ஏப்ரல் 30 ஆம் தேதிக்குத் தள்ளி வைக்கப்பட்டு உள்ளதாக மத்திய அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்தார்.
மக்களவையில் இன்று பேசிய அமைச்சர் பிரணாப் முகர்ஜி, "சரப்ஜித் சிங்கின் தூக்கு தண்டனை ஏப்ரல் 30 ஆம் தேதிக்குத் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் அரசால் இந்தியத் தூதரகத்திற்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்விடயத்தில் நாம் பாதி வெற்றி பெற்றுள்ளோம். முழுமையாக சரப்ஜித் சிங்கை விடுவிக்கத் தேவையான நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும்" என்றார்.
மக்களவையில் நேற்று பிரணாப் முகர்ஜி வாசித்த அறிக்கையில், மனிதாபிமான அடிப்படையில் சரப்ஜித் சிங்கின் கருணை மனுவை ஏற்றுக்கொள்ள பாகிஸ்தான் அரசு முன்வரவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருந்ததும், பஞ்சாப் முதல்வர் பிரகாஷ் சிங் பாதலுக்குப் பிரதமர் மன்மோகன் சிங் அளித்த பதிலில், சரப்ஜித் சிங்கை விடுவிக்கத் தேவையான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தானின் லாகூர், முல்டான் நகரங்களில் கடந்த 1991 ஆம் ஆண்டு நடந்த தொடர்குண்டு வெடிப்புகளில் தொடர்புடைய குற்றத்தில் கைது செய்யப்பட்டுள்ள சரப்ஜித் சிங்கிற்கு ஏப்ரல் 1 ஆம் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
இவ்வழக்கில், சரப்ஜித் சிங் தாக்கல் செய்த கருணை மனுவை கடந்த 2006 ஆம் ஆண்டு மார்ச் மாதம் பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.
இதையடுத்து இந்த ஆண்டு மார்ச் 3 ஆம் தேதி பாகிஸ்தான் அதிபர் பர்வேஷ் முஷாரஃப்பும் சரப்ஜித் சிங்கின் கருணை மனுவை நிராகரித்தார்.
இதைத் தொடர்ந்து "சரப்ஜித் சிங்கைத் தூக்கிலிடுவதில் எந்தத் தாமதமும் இருக்காது. அவர் குறிப்பிட்ட ஏப்ரல் 1 ஆம் தேதி உறுதியாகத் தூக்கிலிடப்படுவார்" என்று பாகிஸ்தான் உள்துறை அமைச்சகச் செய்தித் தொடர்பாளர் பிரிக் ஜாவத் இக்பால் சீமா கூறினார்.
இந்நிலையில், சரப்ஜித் சிங் விடயத்தில் இந்திய அரசு உடனடியாகக் கவனம் செலுத்தியது. தூதரக மட்டத்திலும், பாகிஸ்தான் உயரதிகாரிகள் மட்டத்திலும் பேச்சுக்கள் நடத்தப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்தது.