பங்குச் சந்தைகளில் ஏற்பட்டுள்ள சரிவினால் பாதிக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான சிறு முதலீட்டாளர்களைப் பாதுகாக்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பா.ஜ.க. வலியுறுத்தியுள்ளது.
மக்களவையில் இன்று இதுபற்றிப் பேசிய பா.ஜ.க. துணைத் தலைவர் விஜய் குமார் மல்ஹோத்ரா, சிறு மூதலீட்டாளர்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்பினால் நமது நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி பாதிக்கப்படும் என்றார்.
அமெரிக்கப் பங்குச் சந்தையில் ஏற்பட்ட சரிவினால் இந்தியப் பங்குச் சந்தையும் பாதிக்கப்பட்டுள்ளது என்று நிதியமைச்சர் சிதம்பரம் கூறியிருந்ததைக் குறிப்பிட்ட மல்ஹோத்ரா, மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையும் பங்குச் சந்தையை பாதித்துள்ளது என்றார்.
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் சரிந்து வருவதைத் தடுக்க மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், நிதிநிலை அறிக்கையில் கூட ஏற்றுமதியாளர்களுக்கு எந்தச் சலுகையும் வழங்கப்படவில்லை என்றும் அவர் குற்றம்சாற்றினார்.
இந்தியப் பங்குச் சந்தைகளில் பயங்கரவாதிகளின் முதலீடு பற்றியும், அந்நிய நிறுவனங்களின் நேரடி முதலீடு பற்றியும் தாங்கள் எச்சரித்ததை மத்திய அரசு நிராகரித்து விட்டதுதான், தற்போது பங்குச் சந்தையில் ஏற்பட்டுள்ள சரிவிற்குக் காரணம் என்றார் மல்ஹோத்ரா.