இந்திய- அமெரிக்க அணுசக்தி ஒத்துழைப்பு உடன்பாட்டிற்கு அவசியமான தனித்த கண்காணிப்பு ஒப்பந்தத்தில் இறுதி முடிவு இந்தியாவின் கைகளில் உள்ளது என்று சர்வதேச அணுசக்தி முகமை கூறியுள்ளது.
"இருதரப்பும் தனித்த கண்காணிப்பு ஒப்பந்தத்தின் அம்சங்களை இறுதி செய்து விட்டன. ஆனால், ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவது பற்றி இந்தியாதான் முடிவு செய்து சர்வதேச அணுசக்தி முகமைக்குத் தெரிவிக்க வேண்டும். அதுவரை ஒப்பந்தம் முழுமையடையாது. இதனால், பந்து இப்போது இந்தியாவின் கைகளில் உள்ளது" என்று சர்வதேச அணுசக்தி முகமையின் பேச்சாளர் அயான் எவ்ரென்செல் கூறியுள்ளார்.
பி.டி.ஐ. நிறுவனத்திற்கு மின்னஞ்சல் மூலம் அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
தனித்த கண்காணிப்பு ஒப்பந்தம் தொடர்பாக சர்வதேச அணுசக்தி முகமையுடன் மத்திய அரசு வியன்னாவில் நடத்திய பேச்சு குறித்து விவாதிப்பதற்காக கடந்த திங்களன்று கூடிய ஐ.மு.கூ- இடதுசாரி உயர்மட்டக் குழுவில், அடுத்த மாதம் மீண்டும் கூடுவதென்று முடிவு செய்யப்பட்டது.
இதற்கிடையில் மே மாதம் இரண்டாவது வாரத்தில் சர்வதேச அணுசக்தி முகமையின் சிறப்பு வாரியக் கூட்டம் முகமையின் தலைவர் முகமது எல்பராடி தலைமையில் நடக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.