பொதுமக்களுக்கு சேவை செய்ய விரும்புகிறேன். ஆனால், அரசியலில் நுழையும் திட்டம் ஏதும் இல்லை என்று இந்தியாவின் முதல் பெண் ஐ.பி.எஸ். அதிகாரியான கிரண் பேடி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் தனியார் தொலைக்காட்சி துவக்க விழாவில் பங்கேற்ற கிரண் பேடி, 'இந்த காலகட்டத்தில் தகவல் தொழில்நுட்பம் என்றால் சக்தி என்று பொருள்படுகிறது. வெற்றி பெற தகவல் தொழில்நுட்பம் முக்கிய கருவியாக உள்ளது. பெண்கள் இத்துறையை பயன்படுத்தி தங்களது குறிக்கோள்களை அடைய வேண்டும்.
நீதிபதிகளுக்கு பாலினம் ஒரு விஷயமில்லை. யாருக்கும் சாதமாக இல்லாமல் நடுநிலையாக தீர்ப்பு வழங்குகின்றனர். நீதிமன்றங்களுக்கு நிர்பந்தங்கள் உள்ளபோதிலும், அவர்கள் தீர்ப்பளித்து வருகின்றனர். தேங்கியுள்ள வழக்குகளை விசாரித்து தீர்ப்பளிக்க போதுமான நீதிபதிகள் நியமிக்கப்படவேண்டும்.
பத்திரிக்கை செய்திகளை படிக்க நான் எப்போதுமே தவறியதில்லை. பொதுமக்களுக்கு பல்வேறு வழிகளில் சேவை செய்ய விரும்புகிறேன். ஆனால், அரசியலில் நுழையும் திட்டம் இல்லை' என்றார்.
டெல்லி காவல்துறை ஆணையராக முடியாததையடுத்து, நவம்பரில் தனது பணியை விட்டுவிலகிய கிரண் பேடிக்கு சமீபத்தில், அன்னேமேரி-மேடிசன் விருது வழங்கப்பட்டது. டெல்லி திகார் சிறைச்சாலையில் சீர்திருத்தம் மேற்கொண்டதற்காக இந்த விருது வழங்கப்பட்டது.