பெண் நிருபர் ஷிவானி பட்நாகர் கொலை வழக்கில் ஹரியானாவின் முன்னாள் காவல்துறை ஐ.ஜி. ஆர்.கே.ஷர்மா உள்பட 4 பேர் குற்றவாளிகள் என்று டெல்லி விரைவு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்த வழக்கை விசாரித்த கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி ராஜேந்திர குமார் சாஸ்திரி தனது தீர்ப்பில், ஆர்.கே.ஷர்மா, அவருக்கு உடந்தையாக இருந்த சத்ய பிரகாஷ், பிரதீப் ஷர்மா மற்றும் ஸ்ரீ பகவான் ஆகியோர் குற்றவாளிகள் என்று அறிவித்தார்.
இவர்கள் நால்வரும், இ.த.ச. பிரிவு 302 (கொலை), 102 (குற்றச் சதி) ஆகியவற்றின் கீழ் குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கப்பட்டது. இவர்களுக்கான தண்டனை விவரங்களை வியாழக்கிழமை அறிவிப்பதாக நீதிபதி கூறினார்.
இவ்வழக்கில் குற்றம்சாற்றப்பட்டிருந்த ஜெய் பிரகாஷ் ஷர்மா, கலு ஆகிய இருவரும் போதிய ஆதாரங்கள் இல்லாததால் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.
இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையில் பணியாற்றிய ஷிவானி, கடந்த 1999-ம் ஆண்டு ஜனவரி 23-ம் தேதி டெல்லியில் உள்ள அவரது வீட்டில் கொலை செய்யப்பட்டார்.
இதைத் தொடர்ந்து, ஷிவானியுடன் நெருங்கியத் தொடர்பு கொண்டிருந்ததாகக் கூறப்பட்ட ஷர்மா, கடந்த 2002-ல் அம்பாலா நீதிமன்றத்தின் சரணடைந்து, பின்னர் திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.