ஜம்மு- காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல் முஜாஹிதீன் இயக்கத்தைச் சேர்ந்த முக்கியத் தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டான்.
புல்வாமா மாவட்டத்தில் உள்ள மலைப் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாகக் கிடைத்த தகவலையடுத்து ராணுவத்தினரும், உள்ளூர் காவல் துறையினரும் இணைந்து தேடுதல் வேட்டை நடத்தினர்.
அப்போது ஒரு வீட்டில் பதுங்கியிருந்த தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையில் கடும் மோதல் வெடித்தது. இதில் தீவிரவாதி ஒருவன் சுட்டுக்கொல்லப்பட்டான்.
இதையடுத்து நடத்திய விசாரணையில் கொல்லப்பட்ட தீவிரவாதி ஹிஸ்புல் முஜாஹிதீன் இயக்கத்தைச் சேர்ந்த சோட்டா ஜஹாங்கிர் என்பதும், அவனுக்குப் பல்வேறு கொலை வழக்குகளில் தொடர்பு இருப்பதும் தெரியவந்தது.
குறிப்பாக கடந்த 2006 ஆம் ஆண்டு ஹம்சப்பூரா, பஞ்பூரா பகுதிகளில், ஏராளமான படையினர் உயிரிழப்பதற்குக் காரணமான தாக்குதலை நடத்தியது இவன்தான் என்று புல்வாமா மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் சர்தார் கான் கூறினார்.
தாக்குதல் நடந்த இடத்தில் இருந்து 2 ஏ.கே. 47 துப்பாக்கிகள், ஒரு கைத்துப்பாக்கி, 56 சுற்றுக்கள் இயந்திரத் துப்பாக்கித் தோட்டா உள்ளிட்ட பல்வேறு ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.