தனக்குப் பிடித்த கொல்கட்டா நகரத்தில் இயல்பான வாழ்க்கை வாழ விரும்புவதாக வங்கதேசப் பெண் எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரீன் கூறினார்.
டெல்லியில் ரகசிய இடத்தில் தங்கியுள்ள தஸ்லிமா நஸ்ரீன், பி.டி.ஐ. செய்தி நிறுவனத்திடம் பேசுகையில், தான் கடந்த ஏழரை மாதங்களாக உடல் நலக்குறைவுடன் வாழ்ந்து வருவதாகத் தெரிவித்தார். தனக்கு இதயநோய் உள்ளதாகவும், கண் நோய் உள்ளதாகவும் குறிப்பிட்டார்.
"இந்த இயலா நிலையில் இருந்து நான் மீள விரும்புகிறேன். என்னால் மக்களுடன் தொடர்புகொள்ள முடியவில்லை. இரத்த அழுத்தத்திற்கு வழி வகுக்கும் இந்த அழுத்தமான சூழலில் என்னால் வசிக்க முடியவில்லை. அழுத்தத்தில் இருந்து விடுபட்டு முழுமையான வாழ்க்கை வாழவே நான் விரும்புகிறேன்" என்றார்.
சிகிச்சைக்காக அயல்நாடு செல்ல வேண்டிய கட்டாயம் தனக்கு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்த தஸ்லிமா, எந்த நாட்டிற்குச் செல்ல விருப்பம் என்பதைக் கூறவில்லை.
சிகிச்சைக்குப் பிறகு இந்தியாவிற்குத் திரும்ப விருப்பம் என்ற தஸ்லிமா, தன்னை இயல்பான வாழ்க்கை வாழ அனுமதித்தால் கொல்கத்தாவில் தனக்குப் பிடித்தமான கொல்கட்டாவில் வசிக்க வேண்டும் என்று கூறினார்.