இந்திய- அமெரிக்க அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள யு.பி.ஏ.- இடதுசாரி உயர்மட்டக் குழு ஏழாவது முறையாக இன்று கூடியது.
இக்கூட்டத்தில், இந்தியாவிற்கான தனித்த கண்காணிப்பு ஒப்பந்தம் தொடர்பாக சர்வதேச அணுசக்தி முகமையுடன் இந்தியா நடத்திய பேச்சுக்கள் குறித்து மீண்டும் ஏப்ரல் மாதம் கூடி விவாதிக்க முடிவு செய்யப்பட்டது.
இந்திய- அமெரிக்க அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள யு.பி.ஏ.- இடதுசாரி உயர்மட்டக் குழுக் கூட்டம் இன்று குழுவின் ஒருங்கிணைப்பாளரும் மத்திய அயலுறவு அமைச்சருமான பிரணாப் முகர்ஜியின் வீட்டில் நடந்தது.
சுமார் 75 நிமிடங்கள் நீடித்த இக்கூட்டத்தில் குழுவின் எல்லா உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் பிரணாப் முகர்ஜி, இந்தியாவிற்கான தனித்த கண்காணிப்பு ஒப்பந்தம் குறித்து இன்னும் விவாதிக்க வேண்டும் என்று குழுவின் உறுப்பினர்கள் விரும்புகின்றனர். இதனால் மீண்டும் ஏப்ரல் மாதம் கூட்டம் நடக்கும் என்றார்.
இதற்கிடையில் வருகிற 24 ஆம் தேதி அமெரிக்கா செல்லவுள்ள அமைச்சர் பிரணாப் முகர்ஜி, அந்நாட்டு அதிகாரிகளுடன் அணுசக்தி ஒப்பந்தம் பற்றி விவாதிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.