திபெத் கலவரம் சீனாவின் உள்விவகாரம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூறியுள்ளது.
இது குறித்து டெல்லியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் சீதாராம் யச்சூரி கூறியதாவது:
சீனாவின் ஒருங்கிணைந்த பகுதி திபெத் என்று இந்திய அரசு அங்கீகரித்துள்ளது. அங்கிருந்து வரும் அகதிகள் இந்தியாவில் தங்க அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அரசு கூறியுள்ளது.
தலாய் லாமா இந்தியாவிற்கு வருவதற்கு முன்பிருந்தே அரசின் நிலை இதுதான். இந்த நிலைபாட்டை நாங்களும் ஆதரிக்கிறோம்.
லாசாவில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அது சீனாவின் உள்விவகாரம் என்று மட்டும்தான் என்னால் கூற முடியும்.
காஷ்மீரைப் பற்றி சில நாடுகள் பேசினால் நாம் எவ்வாறு பதிலளிப்போம்?
இது எங்கள் உள்விவகாரம் என்றும், எங்கள் உள்விவகாரங்களில் இதுபோன்ற தலையீடுகளை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் நாம் கூற மாட்டோமா?
நந்திகிராம் வன்முறைகள் பற்றி அமெரிக்கா அறிக்கை வெளியிட்டதற்கு நாம் என்ன செய்தோம்?
இது இந்தியாவின் உள் விவகாரம் என்று மத்திய அரசு உறுதியாகக் கூறியது.
அமெரிக்கா அவர்களின் சொந்த மக்களை எப்படி நடத்துகிறது என்று உங்களால் கேள்வி எழுப்ப முடியுமா?
இவ்வாறு யச்சூரி கூறினார்.