அமெரிக்காவில் தயாராகும் ஆறு சி-130, ஜெ- 30 ரக விமானங்களை இந்திய விமானப் படைக்கு வாங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என்று மத்தியப் பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோணி தெரிவித்தார்.
இதற்கான ஒட்டுமொத்த செலவு 962,454,677 அமெரிக்க டாலர்கள் என்றும், 2011 டிசம்பர் மாதத்திற்குள் இந்த விமானங்கள் ஆறும் இந்தியாவிற்கு வந்துவிடும் என்றும் அமைச்சர் அந்தோணி மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு அளித்துள்ள பதிலில் கூறியுள்ளார்.
இதேபோல, ராணுவத்திற்கும், விமானப் படைக்கும் அதிநவீன துருவ் ஹெலிகாப்டர்களை வழங்குவதற்கான ஒப்பந்தத்தை ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் இறுதி செய்துள்ளதாகவும், 2012-13 ற்குள் விமானப் படைக்கும், 2015-16 ற்குள் ராணுவத்திற்கும் ஹெலிகாப்டர்கள் வழங்கப்பட்டுவிடும் என்றும் அவர் கூறியுள்ளார்.
குறிப்பிட்ட காலத்திற்குள் ஹெலிகாப்டர்களைத் தயாரித்து அளிக்கும் வகையில் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தின் கட்டமைப்புத் திறன் மேம்படுத்தப்பட்டு வருவதாகக் கூறியுள்ள அமைச்சர் அந்தோணி, ஹெலிகாப்டர் பராமரிப்பு மற்றும் பழுது நீக்குதல் பணிகளுக்கு அந்நிறுவனம் தயாராகி வருவதாகக் குறிப்பிட்டார்.